பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்த்த வழக்கு: தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
டெல்லி: வாக்காளர் பட்டியல் திருத்தம் நாடு முழுவதும் அமலாகும் என உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது. பீகார் மாநிலத்தில் சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்தை எதிர்த்து காங்கிரஸ், திமுக, விசிக, ஆர்ஜேடி, சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஆதார் அட்டையை குடியுரிமை ஆவணமாக ஏற்க முடியாது என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்தது. குடியுரிமை விவகாரத்தில் உள்துறை அமைச்சகம்தான் முடிவெடுக்க முடியும் என்றும் ஆதார் அட்டையை குடியுரிமை ஆவணமாக ஏற்க முடியாது என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதைக் கேட்ட உச்சநீதிமன்றம், ஆதார் அட்டையை ஏற்க முடியாது என ஏன் குறுகிய காலத்தில் முடிவெடுக்கப்பட்டது. முன்னரே இந்த நடவடிக்கையை தொடங்கியிருக்கலாமே? என தேர்தல் ஆணையத்துக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் பிறப்பிக்க உத்தரவிட்டது.
மேலும், வாக்காளர் பட்டியல் திருத்தத்தை தேர்தல் நடைமுறையோடு ஏன் குழப்ப வேண்டும்; தேர்தல் இல்லாத காலங்களில் வாக்காளர் பட்டியல் திருத்த நடைமுறையை செய்யலாமே?; குறுகிய கால அவகாசத்தில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த நடவடிக்கையை மேற்கொண்டது ஏன்?, பீகாரில் மாநிலத்தில் நவம்பர் மாதத்தில் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தற்போது ஏன்?, பீகார் தேர்தல் விவகாரத்தில் ஏன் குடியுரிமை பிரச்சினையை கொண்டு வருகிறீர்கள்? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
இதற்கு பதிலளித்த தேர்தல் ஆணையம், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முறை நாடு முழுவதும் மேற்கொள்ளப்படவிருக்கிறது. வாக்களிப்பதற்கு ஒருவர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும் என மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் கூறுகிறது. இதற்கும் தேர்தலுக்கும் தொடர்பு இல்லை என்று கூறிய நிலையில், பீகார் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர் சிறப்பு திருத்தம் சரியானதுதான் என்றும், இதற்கும் தேர்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் தேர்தல் ஆணையம் கூறியது.
வாக்காளர் உரிமை பெற்றவர், இந்தியக் குடிமகனா என்பதை உறுதி செய்ய வேண்டியது அவசியம்தானே? அதற்காக மேற்கொள்ளப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முறை நியாயமானதே என்றும் உச்சநீதிமன்றம் கருத்துக் கூறியிருக்கிறது. இதையடுத்து, ஒருவர் இந்திய குடிமகனா இல்லையா? என்பதை உறுதி செய்ய வேண்டியது வாக்காளர்களின் வேலை, தேர்தல் ஆணையம் அல்ல என்று மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் கபில் சிபல் வாதத்தை முன்வைத்தார்.
இந்நிலையில், பிற்பகல் மீண்டும் விசாரணைக்கு வந்த வழக்கில், பீகாரில் வாக்காளர் திருத்தத்தின்போது ஆதார், வாக்காளர் அட்டை, குடும்ப அட்டையை ஆவணமாக ஏற்க பரிசீலிக்கப்படும் என தேர்தல் ஆணையம் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக ஒரு வாரத்தில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், தேர்தல் ஆணையத்தின் பதிலுக்கு மனுதாரர்கள் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு மீண்டும் ஜூலை 28ம் தேதி விசாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.