வாக்கு திருட்டு குற்றச்சாட்டு ராகுல்காந்திக்கு சரத்பவார் ஆதரவு: தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த வலியுறுத்தல்
நாக்பூர்: எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி எழுப்பிய வாக்கு திருட்டு குற்றச்சாட்டு குறித்து தேர்தல் ஆணையம் விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று என்சிபி(எஸ்பி) தலைவர் சரத்பவார் வலியுறுத்தி இருக்கிறார். பாஜ மற்றும் தேர்தல் ஆணையத்துக்கு எதிராக மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி கடுமையாக விமர்சித்து வருகின்றார். மேலும் பாஜவும், தேர்தல் ஆணையமும் வாக்கு திருட்டில் ஈடுபடுவதாகவும் குற்றஞ்சாட்டி உள்ளார். இது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றது.
இந்நிலையில் நாக்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய என்சிபி (எஸ்பி) தலைவர் சரத் பவார், 2024ம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு முன்பாக டெல்லியில் இருந்து இரண்டு பேர் என்னை சந்தித்தனர். சட்டப்பேரவை தேர்தலில் 288 தொகுதிகளில் 160 தொகுதிகளில் எதிர்க்கட்சியை (மகா விகாஸ் கூட்டணி) வெற்றி பெற வைக்கும் உத்தரவாதத்துடன் உதவுவதற்கு அவர்கள் முன்வந்தனர். நான் அவர்களை ராகுல்காந்திக்கு அறிமுகம் செய்தேன். அவரிடம் கூறியதை அவர் புறக்கணித்தார்.
இதுபோன்ற விஷயங்களில் நாம் (எதிர்க்கட்சிகள்) ஈடுபடக்கூடாது. மக்களிடம் நேரடியாக செல்ல வேண்டும் என்ற கருத்தையும் அவர் கொண்டு இருந்தார். இரண்டு நபர்களின் கூற்றுக்களுக்கு எந்த முக்கியத்துவத்தையும் நான் வழங்கவில்லை என்பதால் அவர்களின் விவரங்கள் என்னிடம் இல்லை. வாக்குத்திருட்டு குறித்து ராகுல் காந்தியின் விளக்கக்காட்டி நன்கு ஆராயப்பட்டு நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
தேர்தல் செயல்முறையின் நேர்மை மற்றும் தேர்தல் கண்காணிப்பு அமைப்பின் பிம்பம் குறித்த சந்தேகங்களை மக்களிடையே நீக்குவதற்காக எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி எழுப்பிய வாக்கு திருட்டு குற்றச்சாட்டு குறித்து தேர்தல் ஆணையம் விரிவான விசாரணை நடத்த வேண்டும். விசாரணை உண்மையை வெளிக்கொணரும் என்று நான் நினைக்கிறேன்” என்றார்.
* ராகுல் கருத்தை சரத்பவார் ஆதரிப்பது ஏன்? மகாராஷ்டிரா முதல்வர் கேள்வி
மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நவிஸ் கூறுகையில்,’ மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் 2 பேர் தன்னை சந்தித்து எதிர்க்கட்சியின் வெற்றியை உறுதி செய்ய முன்வந்தது குறித்து சரத்பவார் இப்போது ஏன் கூறுகிறார்?. தேர்தல் திருட்டு தொடர்பான ராகுல் காந்தியின் கூற்றுகளுக்குப் பிறகு பவார் இதை ஏன் வெளிப்படுத்துகிறார்?
முன்பெல்லாம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்துவது குறித்த ராகுல்காந்தியின் கூற்றுகளை சரத்பவார் ஒருபோதும் ஆதரித்ததில்லை. எதுவாக இருந்தாலும், இந்தியாவில் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள் நடத்தப்படுகின்றன என்று சொல்லுவார். இப்போது ராகுல்காந்தி கருத்தை அவர் பிரதிபலிக்கிறார்’ என்றார்.
* எம்பி பதவியை ராகுல்காந்தி ராஜினாமா செய்ய வேண்டும்: பா.ஜ சொல்கிறது
பா.ஜ தேசிய செய்தி தொடர்பாளர் கவுரவ் பாட்டியா நேற்று கூறுகையில், ‘தேர்தல் ஆணையத்தின் மீதும், உச்ச நீதிமன்றத்தின் கருத்துகள் மீதும் ராகுல், சோனியா, பிரியங்காவுக்கு நம்பிக்கை இல்லையென்றால் எம்பி பதவியை ராஜினாமா செய்யுங்கள். இதே போல் காங்கிரஸ் ஆளும் கர்நாடகா, தெலங்கானா, இமாச்சல் முதல்வர்களும் பதவி விலக வேண்டும். உங்களுக்கு எது பொருந்துகிறதோ, அதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள். எது சிரமமாக இருக்கிறதோ, அதை நீங்கள் நிராகரித்து தேர்தல் ஆணையத்தின் மீது அவதூறுகளை வைக்கிறீர்கள். இது வேலை செய்யாது’ என்றார்.
* ராகுல் மன்னிப்பு கேட்க தேர்தல் ஆணையம் மீண்டும் வலியுறுத்தல்
வாக்கு திருட்டு குறித்து ஆதாரங்களுடன் புகார் அளித்த ராகுல்காந்தி, பிரமாண பத்திரத்தில் கையெழுத்து போட்டு புகார் அளிக்க வேண்டும் அல்லது நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்து இருந்தது. நேற்று மீண்டும் அதே கருத்தை தேர்தல் ஆணையம் வலியுறுத்தி உள்ளது.