வாக்குக்காக தமிழ் மீது மோடி பாசம்: செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு
சென்னை: ஒடிசா, பீகாரில் தமிழர்களை அவமதிப்பாக பேசிவிட்டு, வாக்கு அரசியலுக்காக கோவையில் தமிழ் மீது பிரதமர் பாசம் காட்டி பேசுகிறார் என்று செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டியுள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: கோவைக்கு வருகை புரிந்து ‘தமிழ் கற்க முடியாதது வருத்தம்’ என்று கூறிய பிரதமர் நரேந்திர மோடிக்கு நான் தெளிவாகச் சொல்ல விரும்புவது, தமிழ் அறியாமை ஒரு குற்றமல்ல. ஆனால் தமிழர்களை இழிவுபடுத்தி பேசிக் கொண்டு, தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை திணிக்க முயல்வதும், மாநிலத்திற்கு உரிய நிதியை மறுத்து வைப்பதும் தான் பெரிய பிரச்னை. ஒடிசா, பீகார் போன்ற மாநிலங்களில் தமிழர்களைப் பற்றி அவமதிப்பாக பேசி வாக்குகள் கோரும் அரசியலும், தமிழ்நாட்டில் மக்களின் மனதைப் பிடிக்க ‘தமிழ் மீது பாசம்’ என்ற மேடை பேச்சும் இரண்டும் ஒன்றல்ல. தமிழ் மொழியையும் தமிழர் உரிமையையும் மதிக்காத ஒன்றிய அரசின் மொழிக் கொள்கையே இந்த நாட்டின் நலனுக்கும், தமிழகத்தின் உரிய உரிமைகளுக்கும் தடையாக உள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.