வாக்கு திருட்டுக்கு எதிராக கையெழுத்து இயக்கம் தமிழ்நாடு முழுவதும் 1.10 கோடி கையெழுத்து வாங்கிய காங்கிரசார்: லாரி மூலம் செல்வப்பெருந்தகை டெல்லிக்கு அனுப்பி வைத்தார்
சென்னை: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் அறிவுறுத்தலின் பேரில், வாக்குத் திருட்டுக்கு எதிராக தமிழக காங்கிரஸ் சார்பில் 1 கோடியே 10 லட்சத்திற்கும் அதிகமான கையெழுத்து படிவங்கள் பெறப்பட்டது. இவற்றை லாரி மூலம் டெல்லி தலைமை அலுவலகத்திற்கு அனுப்பும் நிகழ்ச்சி நேற்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. இதை தொடர்ந்து செல்வப்பெருந்தகை நிருபர்களிடம் கூறியதாவது: ராகுல் காந்தி வாக்குத் திருட்டை ஆதாரத்துடன் வெளிப்படுத்தினார். மக்கள் மத்தியில் இதைக் கொண்டு சென்று, தேர்தல் ஆணையத்திற்கும் ஒன்றிய அரசுக்கும் எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் இந்தக் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது.
தமிழ்நாட்டில் ஒரு கோடி பேரிடம் கையெழுத்துப் பெற நிர்ணயிக்கப்பட்டது. அதைவிட அதிகமாக ஒரு கோடியே 10 லட்சம் கையெழுத்து பெறப்பட்டது. இதன் மூலம் மோடி அரசின் மோசமான வேலைகளை மக்களும் நன்றாக உணர்ந்து இருக்கிறார்கள் என்பது தெரியவந்தது. அனைத்து மாவட்டங்களிலும் காங்கிரஸ் கட்சியினர் சிறப்பாகச் செயல்பட்டு இந்தக் கையெழுத்து இயக்கத்தை வெற்றியடைய வைத்துள்ளார்கள். கையெழுத்துப் பண்டல்களைக் கொண்டு செல்லும் லாரி டெல்லி சென்றவுடன் கட்சித் தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில், முன்னாள் தலைவர்கள் கிருஷ்ணசாமி, கே.வி.தங்கபாலு, சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் ராஜேஷ் குமார், எம்எல்ஏக்கள் அசன் மவுலானா, துரை சந்திரசேகர், துணைத் தலைவர்கள் சொர்ணா சேதுராமன், விஜயன், உ.பலராமன், அமைப்புச் செயலாளர் ராம் மோகன், பொதுச் செயலாளர்கள் டி.செல்வம், ரங்கபாஷ்யம், அருள்பெத்தையா, எஸ்.ஏ.வாசு, இலக்கிய அணி தலைவர் பி.எஸ்.புத்தன், மாவட்டத் தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், எம்.ஏ.முத்தழகன், மாவட்ட பொறுப்பாளர் தாம்பரம் நாராயணன், டி.அய்யம்பெருமாள், மன்சூர் அலிகான், டி.என். அசோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.