வாக்குத் திருட்டு தான் முக்கிய பிரச்னை பிரதமரின் மணிப்பூர் பயணம் பெரிய விஷயமல்ல: எதிர்க்கட்சி தலைவர் ராகுல் விமர்சனம்
ஜூனகத்: பிரதமர் மோடியின் மணிப்பூர் பயணம் பெரிய விஷயமல்ல. வாக்குத் திருட்டு தான் நாட்டில் தற்போதுள்ள முக்கிய பிரச்னையாகும் என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி குஜராத்தின் ஜூனகத் மாவட்டத்தில் உள்ள கெஷாத் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,‘‘மணிப்பூர் மாநிலம் நீண்ட காலமாக சிக்கலில் உள்ளது.
ஆனால் பிரதமர் மோடி இப்போது தான் அங்கு செல்வதற்கு முடிவு செய்துள்ளார். எனவே அது பெரிய விஷயமல்ல. இந்தியாவில் இன்றைய முக்கிய பிரச்னை வாக்குத் திருட்டாகும். அவர்கள் அரியானா மற்றும் மகாராஷ்டிராவின் தேர்தல்களை திருடினார்கள். சமீபத்தில் கர்நாடகாவில் அந்த திருட்டை நாங்கள் நிரூபித்தோம்.எனவே இன்றைய முக்கிய பிரச்னை வாக்குத் திருட்டாகும். அனைத்து இடங்களிலும் மக்கள் வாக்குத்திருட்டு கோஷங்களை எழுப்புகிறார்கள்” என்றார்.