இன்று 49வது பிறந்த நாள்; உதயநிதி வீட்டில் குவிந்த தொண்டர்கள்: தமிழகம் முழுவதும் நல உதவிகள் வழங்கப்பட்டது
* முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார்
சென்னை: தமிழக துணை முதல்வரும், திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தனது பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலினை இன்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். தலைவர்கள் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். உதயநிதிக்கு அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள், பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்தனர். மேலும் தமிழகம் முழுவதும் திமுக சார்பில் பல்வேறு நல உதவிகள் வழங்கப்பட்டது.
தமிழக துணை முதல்வரும், திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தனது 49வது பிறந்த நாளை இன்று காலை சென்னை ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள முதல்வர் வீட்டுக்கு சென்று, தனது தந்தையும், திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின், தாயார் துர்கா ஸ்டாலின் ஆகியோரை நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.
அப்போது உதயநிதிக்கு சால்வை அணிவித்து, உச்சி முகர்ந்து மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார். புத்தகம் பரிசாக வழங்கினார். முன்னதாக உதயநிதி ஸ்டாலின் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து சென்னை வேப்பேரியில் அமைந்துள்ள பெரியார் நினைவிடத்தில் உதயநிதி ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அங்கு சென்னை கிழக்கு மாவட்டம் அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஏற்பாட்டில் நடைபெற்ற விழாவில் மூத்த முன்னோடிகள், மாணவ, மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் ஆகியோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தொடர்ந்து குறிஞ்சி இல்லத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், கீதா ஜீவன், சி.வி.கணேசன், கோவி செழியன், தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, அன்பில் மகேஷ் உள்ளிட்ட அமைச்சர்கள், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, மாவட்ட செயலாளர்கள் மாதவரம் சுதர்சனம், ஆர்.டி.சேகர், எம்எல்ஏக்கள் தாயகம் கவி, பரந்தாமன், எம்.கே.மோகன், ஜோசப் சாமுவேல் உள்ளிட்ட எம்எல்ஏக்கள், திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட ஏராளமானோர் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும் திமுக மாற்றுத்திறனாளிகள் அணியின் மாநிலத் தலைவரும், தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவருமான ரெ.தங்கம் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.
உதயநிதி ஸ்டாலின் தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில், அவருக்கு அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் மற்றும் திமுக மூத்த தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் அண்ணாநகரில் உள்ள மறைந்த பேராசிரியர் அன்பழகன் இல்லத்துக்கு சென்று அவரது திருவுருவபடத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும் அவர் கோபாலபுரத்தில் உள்ள கலைஞர் இல்லத்துக்கு சென்று கலைஞர் திருவுருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது தனது பாட்டி தயாளு அம்மாளிடம் ஆசி பெற்றார். பின்னர் மறைந்த முரசொலி செல்வம் வீட்டுக்கு சென்று, செல்வியிடம் வாழ்த்து பெற்றார். இதையடுத்து, சி.ஐ.டி.நகரில் உள்ள ராஜாத்தி அம்மாள் வீட்டுக்கு சென்று அவரிடம் ஆசி பெற்றார்.
தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இன்று பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது. மேலும் மாபெரும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன. மேலும் ஆதரவற்ற நிலையங்களில் காலை, மதியம் உணவு வழங்கப்பட்டது. மேலும் பல்ேவறு விளையாட்டுப் போட்டி நடத்தப்பட்டன. மேலும் இல்லந்தோறும் சென்று உறுப்பினர் சேர்த்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்றது. அது மட்டுமல்லாமல் இன்று அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை திமுகவினர் வழங்கினர். இதே போல மாநிலம் முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஆதிக்கவாதிகளிடம் குவிந்திருந்த அதிகாரத்தை சாமானிய மக்களிடம் கொண்டு சேர்த்த தமிழ்நாட்டின் தலைமகன் பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவிடத்தில் நமது பிறந்த நாளில் மரியாதை செலுத்தினேன். பேரறிஞர் அண்ணா வழியில் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு காப்போம்! மாநில உரிமைகளையும் - சமூக நீதியையும் நிலைநாட்டுவோம்” என்று தெரிவித்துள்ளார்.
வெல்வோம் 200, படைப்போம் வரலாறு
அப்போது உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், ‘‘தாய், தந்தையை கூட இன்னும் சந்திக்காமல் நேராக பெரியார் திடலுக்கு வந்தேன். மூத்தவர்களாகிய உங்களை சந்தித்து வாழ்த்து பெறுவதற்காக வந்துள்ளேன். கடந்த 2 நாட்களாக தொடர்ந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளேன். அடுத்த 4 மாதங்கள் களத்தில் வேலை பார்க்க வேண்டும். எஸ்ஐஆர் திட்டம் போய் கொண்டிருக்கிறது. அதில் உங்களுடைய வாக்குகளை முதலில் நீங்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும். உங்கள் உறவினர்கள் நண்பர்கள் வாக்குகளை எல்லாம் நீங்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
அந்த பணியிலேயே பி.கே.சேகர்பாவின் சென்னை கிழக்கு மாவட்டம் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது என்ற செய்தி வந்து கொண்டிருக்கிறது. இருந்தாலும் 4 மாத காலம் மிக, மிக முக்கியமான காலம். நம்முடைய டார்க்கெட் தலைவர் சொன்னது போல வெல்வோம் 200, படைப்போம் வரலாறு என்பது தான். அதை என் பிறந்தநாள் வேண்டுகோள் செய்தியாக வைத்து, அந்த 200 தொகுதிகளில் சென்னை கிழக்கு மாவட்டத்தில் உ ள்ள அனைத்து தொகுதிகளிலேயும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி, வெற்றி என்பதை வேண்டும். அது ஒன்றே நமது இலக்கு. இவ்வாறு அவர் பேசினார்.