சட்டப்படி செல்லாத திருமணத்தில் பிறந்த குழந்தைக்கும் சொத்துரிமை: ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு
மதுரை: சட்டப்படி செல்லுபடி ஆகாத திருமணம் என்றாலும், அதன் வாயிலாக பிறந்த குழந்தைகளுக்கும் தந்தையின் சொத்துக்களில் உரிமை உண்டு என, ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தஞ்சாவூரை சேர்ந்த ஒருவருக்கு, 2 திருமணம் நடந்துள்ளது. அவர் உயிரிழந்த நிலையில், அவருடைய வாரிசுதாரர்கள் பாகப்பிரிவினை செய்ய முயன்றனர். அப்போது, அவரது இரண்டாவது மனைவியின் வாரிசுதாரர்கள் சொத்தில் தங்களுக்கும் பங்கு தரும்படி கேட்டு தகராறு செய்துள்ளனர். இதுதொடர்பான வழக்கு தஞ்சாவூர் கீழமை நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது.
அதில், 2013ம் ஆண்டு அளித்த தீர்ப்பில், இரண்டாவது திருமணம் 1949க்கு முன் நடந்துள்ளது. ஆனால், அது முறைப்படி பதிவாகவில்லை. இருப்பினும், இந்து திருமண சட்டம் நிறைவேற்றப்பட்ட 1955க்கு முன் நடந்த திருமணமாக கருத வேண்டியது இருப்பதால், அது சட்டப்படி செல்லுபடியாகும் என உத்தரவிட்டனர். இதையடுத்து முதல் மனைவியின் வாரிசுதாரர்கள் ஐகோர்ட் மதுரை கிளையில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் கார்த்திகேயன், விஜயகுமார் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆவண ஆதாரங்களின் அடிப்படையில், இரண்டாவது திருமணம் 1957ல் நடந்திருப்பது உறுதியாகிறது.
அதன் விளைவாக, சட்டப்படி முதல் மனைவி இருக்கும் போதே நடந்துள்ளதால், இந்து திருமணச் சட்டப்படி இரண்டாவது திருமணம் செல்லாது என அறிவித்து, கீழமை நீதிமன்றத்தின் உத்தரவினை ரத்து செய்தனர். இருப்பினும், இந்து திருமணச் சட்டப்படி, செல்லாத திருமணத்தின் மூலம் பிறந்த குழந்தைகளும் சட்டபூர்வமான வாரிசுகள் ஆவர். அவர்களுக்கு கூட்டுக் குடும்பத்தின் மூதாதையர் சொத்தில் நேரடியாகப் பங்கு கோர முடியாது. ஆனால், தங்கள் தந்தைக்கு அந்தச் சொத்தில் இருந்து எவ்வளவு பங்கு கிடைக்குமோ, அந்தப் பங்கில் மட்டும் அவர்களால் உரிமை கோர முடியும். எனவே இரண்டாவது மனைவியின் வாரிசுதாரர்களுக்கும் சொத்தில் பாகப்பிரிவினை செய்து தர வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.