நடிகை சாய் தன்ஷிகாவுடன் விஷால் திருமணம் இன்று நடக்காதது ஏன்?.. பரபரப்பு தகவல்கள்
சென்னை: நடிகர் விஷால், நடிகை சாய் தன்ஷிகா காதல் திருமணம் இன்று நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இன்று நடக்கவில்லை. இதுகுறித்து பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்ப் படவுலகில் திரைப்பட தயாரிப்பாளராகவும், நடிகராகவும் இருக்கும் ஜி.கே.ரெட்டியின் இளைய மகன் விஷால், தமிழ் திரையுலகில் கடந்த 22 ஆண்டுகளாக நடிகராகவும், தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். தற்போது அவர் தனது 35வது படமான ‘மகுடம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். விரைவில் அவர் ‘துப்பறிவாளன் 2’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். அவரும், நடிகை சாய் தன்ஷிகாவும் ‘விழித்திரு’ என்ற படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சிக்கு பிறகு நெருங்கிப் பழக ஆரம்பித்தனர். அப்படம் சம்பந்தமாக சாய் தன்ஷிகாவுக்கு ஏற்பட்ட பிரச்னையை, தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளராக இருந்து விஷால் தீர்த்து வைத்தார்.
இதையடுத்து அவர்களிடையே ஏற்பட்ட நெருக்கம் நாளடைவில் காதலாக மலர்ந்தது. இதையறிந்த இருவீட்டாரும் அவர்கள் திருமணம் செய்துகொள்ள சம்மதித்தனர். இந்நிலையில், ஆகஸ்ட் 29ம் தேதி தனது 48வது பிறந்தநாளில் தனக்கும், சாய் தன்ஷிகாவுக்கும் சென்னை தியாகராய நகரிலுள்ள தென்னிந்திய நடிகர் சங்க புதிய கட்டிடத்தில் இருக்கும் மண்டபத்தில் திருமணம் நடக்கும் என்று, சில மாதங்களுக்கு முன்பு விஷால் அறிவித்திருந்தார். ஆனால், இன்று தனது பிறந்தநாளை கீழ்ப்பாக்கத்தில் இருக்கும் ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் கொண்டாடிய விஷால், இன்று தனது திருமணம் நடக்கவில்லை என்றும், இந்த ஆண்டிற்குள் தனக்கும், சாய் தன்ஷிகாவுக்கும் திருமணம் நடக்கும் என்றும் நிருபர்களிடம் தெரிவித்தார். மேலும் விஷால் கூறுகையில், ‘வழக்கமாக எனது பிறந்தநாளில் அப்பா, அம்மாவிடம் ஆசி பெறுவேன்.
பிறகு என் கண்முன் கடவுளாக தெரியும் ஆதரவற்ற முதியோர் இல்லத்துக்கு வந்து, அவர்களின் ஆசி பெற்று என் பிறந்தநாளை கொண்டாடி மகிழ்வேன். பிறகு சர்ச்சுக்கு செல்வேன். நான் படித்த பள்ளி, கல்லூரி எல்லாம் கிறிஸ்தவ அமைப்பு என்பதால், அந்த உணர்வு எனக்கு அப்போதிருந்தே ஏற்பட்டது. என்னை பார்க்கும் எல்லோரும் என் திருமணத்தை பற்றியே கேட்கிறார்கள். தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டி வருகிறோம். நாசர், கார்த்தி, நான், கருணாஸ் உள்பட அனைவரும் ஒற்றுமையாக இருந்து கட்டிட பணிகளை மேற்கொள்கிறோம். அரசியலில் கூட இந்த ஒற்றுமையை பார்க்க முடியாது. நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து பணிகளை மேற்கொள்கிறோம். கார்த்திக்கு ஸ்பெஷல் நன்றி. இன்னும் சில மாதங்களில் கட்டிட பணிகள் முடியும். இந்த ஆண்டிற்குள் எனக்கும், சாய் தன்ஷிகாவுக்கும் நடிகர் சங்க புதிய கட்டிடத்தில், அனைவரது ஆசியுடன் திருமணம் நடக்கும்’ என்றார்.
ரஜினிகாந்த் திரையுலகிற்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. அவருக்கு நடிகர் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடத்தப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த விஷால், ‘தொடர்ந்து ஒருவர் 50 ஆண்டுகளை கடந்தும் சூப்பர் ஸ்டாராக இருப்பது என்பது உலக சாதனை. கண்டிப்பாக ரஜினிகாந்த் சாருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடத்தப்படும். அதற்கான பேச்சுவார்த்தை நடக்கிறது. அவருக்கு நடிகர் சங்கம் சார்பில் மனமார்ந்த வாழ்த்துகள்’ என்றார்.