விசாகப்பட்டினத்தில் நாகப்பாம்புக்கு அறுவை சிகிச்சை: மருத்துவர்கள் 8 தையல்கள் போட்டனர்
திருமலை: விசாகப்பட்டினத்தில் தலையில் அடிபட்ட வெள்ளை நாகப்பாம்பிற்கு அறுவை சிகிச்சை செய்து 8 தையல்கள் போட்டப்பட்டது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் சிந்தியா பகுதியில் உள்ள கடற்படை உணவகம் அருகே நேற்று வெள்ளை நாகப்பாம்பு ஒன்று ஓடியது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் அலறி அடித்து ஓடினர். பின்னர் பாம்பு அங்குள்ள ஒரு அட்டைப் பெட்டிக்குள் சென்றது. பயந்துபோன அப்பகுதி மக்கள் உடனடியாக பாம்பு பிடிக்கும் நாகராஜுக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் அங்கு விரைந்து வந்த நாகராஜு கருவிகளை பயன்படுத்தி வெள்ளை நிற நாக பாம்பை பிடித்தார். அப்போது வெள்ளை நிற நாக பாம்பின் தலையில் தோலில் காயங்கள் இருப்பதைக் கவனித்தார். உடனடியாக அதை இந்துஸ்தான் ஷிப்யார்ட் காலனியில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றார். அங்கு, மருத்துவ அதிகாரி சி.எச். சுனில் குமார் பாம்பிற்கு மயக்க மருந்து கொடுத்து, காயத்தில் அறுவை சிகிச்சை செய்தார். தலையில் தோலில் இருந்த காயத்திற்கு 8 தையல் போடப்பட்டது. பாம்பு முழுமையாக குணமடைந்த பிறகு பாதுகாப்பான இடத்தில் விடுவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.