விசாகப்பட்டினத்தில் நாளை 3வது ஒரு நாள் போட்டி; வெற்றியுடன் தொடரை வெல்லுமா இந்தியா?: மல்லுக்கட்ட காத்திருக்கும் தென்ஆப்ரிக்கா
விசாகப்பட்டினம்: இந்தியா -தென்ஆப்ரிக்கா இடையே 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடர் நடந்து வருகிறது. இதில் ராஞ்சியில் நடந்த முதல் போட்டியில் இந்தியாவும், ராய்ப்பூரில் நடந்த 2வது போட்டியில் தென்ஆப்ரிக்காவும் வென்றன. 1-1 என தொடர் சமனில் உள்ள நிலையில் 3வது மற்றும் கடைசி போட்டி நாளை விசாகப்பட்டினத்தில் நடக்கிறது. இதில் வெற்றி பெற்று தொடரை வெல்லும் முனைப்பில் இரு அணிகளும் களம் இறங்குவதால் ரசிகர்களுக்கு விருந்து காத்திருக்கிறது.
இந்திய அணி பேட்டிங்கில் வலுவாக உள்ளது. விராட் கோஹ்லி 2 போட்டியிலும் சதம் அடித்து சூப்பர் பார்மில் உள்ளார். ருதுராஜ் கெய்க்வாட் ராய்ப்பூரில் அதிரடி சதம் விளாசினார். கேப்டன் கே.எல்.ராகுல் 2 போட்டியிலும் அரைசதம் அடித்தார். ரோகித்சர்மாவும் பேட்டிங்கில் வலுசேர்க்கிறார். கில் இல்லாத நிலையில் தனக்கு கிடைத்த 2 வாய்ப்புகளையும் தவறவிட்ட ஜெய்ஸ்வால், நாளை ரன் அடிக்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.பவுலிங்கில் பும்ரா இல்லாத நிலையில் அர்ஷ்தீப் சிங், ஹர்சித் ரானா ஓரளவு நன்றாக பந்துவீசுகின்றனர். வள்ளல் பிரசித் கிருஷ்ணா ரன்களை வாரி வாங்குகிறார். வேறு வேகப்பந்து வீச்சாளர் இல்லாததால் வேறுவழியின்றி அவர் தான் ஆடவேண்டிய கட்டாயம் உள்ளது. வாஷிங்டன் சுந்தரும் 2 போட்டியிலும் சொதப்பி உள்ளார்.
மறுபுறம் தென் ஆப்ரிக்க அணியில் மார்க்ரம், மேத்யூ ப்ரீட்ஸ்கே, டெவால்ட் பிரெவிஸ் என அதிரடி ஆட்டக்காரர்கள் மிரட்டி வருகின்றனர். 8வது வரிசை வரை பேட்டிங் வலுவாக உள்ளது. ஆல்ரவுண்டர்கள் ஜான்சன், கார்பின் போஷ் பேட்டிங் மட்டுமின்றி பவுலிங்கிலும் கைகொடுக்கின்றனர். டிகாக் மட்டுமே 2 போட்டியிலும் ரன் எடுக்கவில்லை. டோனி டி சோர்ஸி, நந்த்ரே பர்கர் 2வது போட்டியில் தசை பிடிப்பால் பாதியில் வெளியேறிய நிலையில் நாளை அவர்கள் களம் இறங்குவார்களா என்ற சந்தேகம் உள்ளது. இரு அணிகளும் சம பலத்துடன் மோதுவதால் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. ஏற்கனவே நடந்த டெஸ்ட் தொடரை 0-2 என இந்தியா இழந்த நிலையில் ஒருநாள் தொடரை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
கோஹ்லிக்கு ராசியான மைதானம்;
* இரு அணிகளும் இதற்கு முன் 96 ஒரு நாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் 41ல் இந்தியா, 52ல் தென்ஆப்ரிக்கா வென்றுள்ளன. 3 போட்டி ரத்தாகி இருக்கிறது.
* விசாகப்பட்டினம் ஒய்எஸ்ஆர் ஸ்டேடியத்தில் இந்தியா இதுவரை 10 ஒரு நாள் போட்டிகளில் ஆடி 7ல் வென்றுள்ளது. 2ல் தோற்றுள்ளது. 2018ல் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான போட்டி டையில் முடிந்துள்ளது. முதலில் பேட் செய்த அணி 3 போட்டியிலும் சேசிங் அணி 6 போட்டியிலும் வென்றுள்ளன.
* வெஸ்ட்இண்டீசுக்கு எதிராக இந்தியா 2019ல் 387/5 ரன் எடுத்ததே அதிகபட்ச ரன்னாகும்.
* விராட் கோஹ்லி இங்கு 7 போட்டியில் ஒன்றில் நாட் அவுட், 3 சதம், 2 அரைசதம் என 587 ரன் அடித்துள்ளார். சராசரி 97.83 ஆகும். பவுலிங்கில் குல்தீப் 4 போட்டியில் 9 விக்கெட் வீழ்த்தி உள்ளார்.
* தென்ஆப்ரிக்கா இங்கு முதன்முறையாக ஒருநாள் போட்டியில்ஆட உள்ளது.
* 25 ஆயிரம் இருக்கைகள் கொண்ட மைதானத்தின் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்துவிட்டன.
பனியால் டாஸ் முக்கியம்;
வடமாநிலங்களில் தற்போது பனிக்காலமாகும். இரவு 7 மணி முதலே பனியின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் டாஸ் முக்கிய பங்கு வகிக்கும். பனியால் 2வது பேட் செய்யும் அணிக்கு சாதகமாக இருக்கும். பவுலர்கள் பந்துவீச கடும் சிரமமாக இருக்கும். டாஸ் வெற்றியை தீர்மானிப்பதில் 80 சதவீதத்திற்கு மேல் சாதகமாக இருக்கும். இந்தியா கடந்த 2023ம் ஆண்டு உலக கோப்பை அரையிறுதிக்கு பின்னர் ஆடிய 20 ஒருநாள் போட்டிகளிலும் டாஸ் வென்றது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.