விருகம்பாக்கம் கால்வாயில் ரூ.30.OO கோடி மதிப்பீட்டில் தூர் வாருதல் உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகளைத் தொடங்கி வைத்தார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சியானது 81.13 கி.மீ நீளத்திற்கு 44 நீர்வழி கால்வாய்களை பராமரித்து வருகிறது. மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி நீர்வளத்துறையின் பராமரிப்பில் இருந்த ஓட்டேரி நல்லா கால்வாய், விருகம்பாக்கம் மற்றும் வீராங்கல் ஓடை ஆகிய நீர்வழிக் கால்வாய்களை பெருநகர சென்னை மாநகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்படி, பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ளப் பாதிப்புகளைத் தடுத்திடும் வகையில், மழைநீர் வடிகால்வாய் கட்டுதல், மழைநீர் வடிகால்வாய் தூர்வாருதல், நீர்வழிக் கால்வாய்களில் தூர்வாரி கட்டமைப்புகளை மேம்படுத்துதல், குளங்களைப் புனரமைத்தல், விளையாட்டு மைதானங்கள், பூங்காக்கள் மற்றும் பொது இடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை உருவாக்குதல் என பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
விருகம்பாக்கம் நீர்வழிக்கால்வாய் விருகம்பாக்கத்தில் உள்ள புவனேஷ்வரி நகரிலிருந்து தொடங்கி சின்மயா நகர், சாலிகிராமம், எம்.எம்.டி.ஏ காலனி வழியாக கூவம் ஆற்றினை சென்றடைகிறது. விருகம்பாக்கம் நீர்வழிக் கால்வாயின் நீளம் 6.70 கீ.மீ ஆகும். இந்த நீர்வழிக் கால்வாயின் அகலம் 8 மீட்டர் முதல் 25 மீட்டர் வரை உள்ளது. விருகம்பாக்கம் நீர்வழிக் கால்வாயில், நீரியியல் வல்லுநர் மூலம் உரிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அந்த அறிக்கையின் அடிப்படையில், மாநகராட்சியின் மூலதன நிதியிலிருந்து கால்வாயில் 6.36 கி.மீ. நீளத்திற்கு 1,07,200 கனமீட்டர் கொள்ளளவிற்கு தூர்வாரும் பணி, 1,490 மீட்டர் நீளத்திற்கு கால்வாயின் பக்கச்சுவரினை உயர்த்தி, அதன் மேல் சங்கிலிவேலி அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (8.9.2025) சென்னை அரும்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விருகம்பாக்கம் கால்வாயில் 30.00 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தூர் வாருதல், தடுப்புச் சுவரினை உயர்த்திக் கட்டுதல், சங்கிலி வேலி அமைத்தல் உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகளைத் தொடங்கி வைத்தார். மேலும், மேற்கொள்ளப்படவுள்ள மேம்பாட்டு பணிகள் குறித்த திட்ட வரைபடத்தினை பார்வையிட்டு, கால்வாய் செல்லும் பகுதிகளின் விவரங்கள், கடந்த ஆண்டுகளில் பாதிக்கப்பட்ட பகுதிகள், மேற்கொள்ளப்பட உள்ள பணிகளின் விவரங்கள் குறித்து அலுவலர்களுடன் கலந்துரையாடினார்.
இந்த புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதன் மூலம், அண்ணாநகர் மண்டலத்திற்குட்பட்ட திருக்குமரபுரம், அன்னை சத்யா நகர், வீரபாண்டி நகர், காமராஜர் நகர், லோகநாக நகர், பத்மநாப நகர், ஆசாத் நகர், கலெக்டர் காலனி, எம்.எம்.டி.ஏ. காலனி, ஔவை நகர், எம்.எச். காலனி, மங்கள் நகர், கோடம்பாக்கம் மண்டலத்திற்குட்பட்ட சின்மயா நகர், சாய்நகர், திருவள்ளுவர் நகர், திருநகர், வளசரவாக்கம் மண்டலத்திற்குட்பட்ட புவனேஸ்வரி நகர், அன்னம்மாள் நகர், நெற்குன்றம், தேனாம்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட திருவள்ளுவர்புரம், கில் நகர், நமச்சிவாயபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சார்ந்த பொதுமக்கள் பெரிதும் பயனடைவர்.
இந்நிகழ்ச்சியில் நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.கே. மோகன், ஏ.எம்.வி.பிரபாகரராஜா, துணை மேயர் மு.மகேஷ் குமார், மாநகராட்சி ஆணையர் ஜெ. குமரகுருபரன், இ.ஆ.ப., சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் டாக்டர் டி.ஜி.வினய்,இ.ஆ.ப., மாமன்ற ஆளுங்கட்சித் தலைவர் ந.இராமலிங்கம், நிலைக்குழுத் தலைவர் (பணிகள்) நே.சிற்றரசு, துணை ஆணையர் (பணிகள்) வி.சிவகிருஷ்ணமூர்த்தி, இ.ஆ.ப., மத்திய வட்டார துணை ஆணையர் எச்.ஆர்.கௌஷிக், இ.ஆ.ப., மண்டலக் குழுத் தலைவர் கூ.பி. ஜெயின் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்