ரூ.1894 கோடியில் அமைகிறது விருதுநகரில் பிரமாண்ட ஜவுளி பூங்கா: முதலீட்டாளர்கள் விண்ணப்பிக்க டிச. 17 கடைசி தேதி; தமிழ்நாடு அரசு அழைப்பு
* சிறப்பு செய்தி
விருதுநகரில் ரூ.1894 கோடியில் அமையும் பிரமாண்ட ஜவுளி பூங்காவிற்கு தொழிற்சாலை நில ஒதுக்கீட்டிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. முதலீட்டாளர்கள் விண்ணப்பிக்க டிசம்பர் 17ம் தேதி கடைசி நாள் என தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம், குமாரலிங்கபுரத்தில் சுமார் 1,052 ஏக்கர் நிலத்தில் பி.எம்.மித்ரா எனப்படும் பிரதமரின் மாபெரும் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா அமைக்கப்பட உள்ளது. இந்த பூங்கா அமைப்பதற்கு கடந்த 2023ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஜவுளி பூங்கா அமைப்பதற்கு ஒன்றிய அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒப்புதல் அளித்தது. மொத்தம் 1500.09 ஏக்கர் பரப்பளவில் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது 1498.23 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி தொழில் பூங்கா அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன. ஒன்றிய, மாநில அரசுகளின் பங்களிப்பு உதவியுடன் சுமார் ரூ.1,894 கோடியில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில், 51 சதவீதம் ஒன்றிய அரசும், 49 சதவீதம் மாநில அரசும் நிதி பங்களிப்பு செய்கின்றன. சிப்காட் நிறுவனமானது தனது சார்பில் ஜவுளி பூங்கா அமைக்கும் பணிகளை முன்னெடுத்து வருகிறது.
குறிப்பாக, சிப்காட்டுக்குள் அமையப்பெறும் சாலைகள், அணுகு சாலைகள், நீர்த்தேக்க தொட்டிகள் போன்ற உள்கட்டமைப்பு பணிகள் அசுரவேகத்தில் நடக்கிறது. முதற்கட்டமாக சிப்காட்டுக்குள், ஜவுளித்துறைகளை ஊக்குவிக்கும் பொருட்டு 1052 ஏக்கர் நிலத்தில் மெகா டெக்ஸ்டைல் பூங்கா அமைப்பதற்காக நிலம் ஒதுக்கப்பட்டு பணிகள் நடக்கின்றன. அதில், சாயக்கழிவுகளை சுத்திகரிக்க சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது. இது, தமிழ்நாட்டின் மிகப்பெரிய ஜவுளி பூங்காவாக உருவாக்கப்பட உள்ளதால் தூத்துக்குடி, ராஜபாளையம், மதுரை மற்றும் திண்டுக்கல் ஆகிய முக்கிய ஜவுளி முனையங்களுடன் மையப்பகுதியாக அமைய உள்ளது.
மேலும், விமான போக்குவரத்துக்கு வசதியாக மதுரை விமான நிலையம் இங்கிருந்து 75 கிமீ தொலைவிலும், தூத்துக்குடி துறைமுகம் 106 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. இதனால், உற்பத்தி, ஏற்றுமதி, இறக்குமதி மற்றும் போக்குவரத்து வசதிகள் எளிதில் கிடைக்க பெறும். பி.எம்.மித்ரா திட்ட மதிப்பின்படி 160 முதல் 180 உற்பத்தி அலகு உள்பட பிற அலகுகளும், சுமார் 2 லட்சம் பேருக்கு மறைமுகமாகவும், நேரடியாகவும் வேலைவாய்ப்பு உருவாக்கப்படுகிறது. மேலும், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குதல் மற்றும் சிப்காட் தொழில் பூங்காவை சுற்றியுள்ள மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல், சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாமை, உள்ளூர் மக்களின் ஆதரவு மற்றும் ஈடுபாடுடன் செயல்படுதல் உள்ளிட்ட கொள்கைகளோடு திட்டப்பணிகள் நடந்து வருகிறது. இந்த பூங்காவில் ஜவுளி மற்றும் அது சார்ந்த நிறுவனங்கள் தொழில் தொடங்க உள்ளன.
இதற்காக 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் முன் வந்துள்ளன. இந்த பூங்கா மூலம் ஒரு லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும். பெண்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்பு உருவாக்கி தரக்கூடிய ஒரு பூங்காவாக இது அமைய உள்ளது. இந்த ஜவுளி பூங்காவில் தங்கி வேலை செய்வோரின் வசதிக்காக 10 ஆயிரம் பேர் தங்கும் வகையிலான தங்கும் இடவசதி ஏற்படுத்தப்படுகிறது. சிப்காட் வளாகத்தின் உள்ளேயே 12 ஏக்கர் பரப்பளவில் துணை மின் நிலையம் அமைய உள்ளதால் 24 மணி நேரமும் தங்குதடையின்றி மின்சாரம், தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் தேவையான தண்ணீர், பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், சாலைகள் என அடிப்படை வசதிகள் அனைத்தும் உள்ளடக்கிய அதிநவீன ஜவுளி பூங்காவாக அமைய உள்ளது. வரும் 2026 செப்டம்பர் மாதத்திற்குள் தொழில் பூங்கா கட்டுமான பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தொழில் பூங்கா மூலம் ரூ.10,000 கோடி அளவிலான முதலீடுகள் ஈர்க்கப்படும். தொழிற்சாலை நில ஒதுக்கீட்டிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில்,‘விருதுநகரில் பிஎம் மித்ரா பூங்கா பயன்பாட்டுக்கு வருகிறது. டிசம்பர் 17ம் தேதி வரை நிலம் ஒதுக்கீடு நடைபெறும். 1052 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த பூங்காவில் உலகத்தரம் வாய்ந்த ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள் ஆலைகள் இடம்பெறுகிறது. ஜவுளி உற்பத்திக்கான அனைத்துமே ஒரே குடையின் கீழ் வருகிறது. இங்கே ஆலை அமைக்க விரும்பும் நிறுவனங்கள் டிசம்பர் 17ம் தேதிக்குள் சிப்காட் இணையதளம் வாயிலாக விண்ணப்பம் செய்யலாம். இந்த ஜவுளி பூங்கா அமைப்பதற்கு ஒப்புதல்களை அளித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடி, ஒன்றிய ஜவுளி துறை அமைச்சர் கிரிராஜ் சிங் ஆகியோருக்கு நன்றி,’என்று தெரிவித்துள்ளார்.
அமைவிட நன்மைகள்
* அதிநவீன உட்கட்டமைப்பு வசதிகள்
* திறன் மேம்பாட்டு மையம்
* சோதனை மேற்கொள்ளும் ஆய்வகம்
* சிறப்பு மையம்
* உற்பத்தி பொருட்களை காட்சிப்படுத்தும் கண்காட்சி மையம்
* சமூக உட்கட்டமைப்பு
* தொழிலாளர் தங்கும் விடுதி
* சுகாதார மையம்
* விளையாட்டு மைதானம்
* குழந்தைகள் காப்பகம்
* சுற்றுச்சூழல் உட்கட்டமைப்பு
* திரவ வெளியேற்றம் இல்லாத பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்
* கட்டிடங்களில் புதுப்பிக்கதக்க ஆற்றலை ஒருங்கிணைத்தல்
* சுத்திகரிக்கப்பட்ட நீர் விநியோக அமைப்பு
* கழிவுநீர் விநியோகத்திற்கான அமைப்பு
* திட மற்றும் திரவ கழிவு மேலாண்மை
* நீராவி கொதிகலன்
* பசுமை சக்தி
கோவை - தூத்துக்குடி வழித்தடத்தின் அருகாமையிலுள்ள ஜவுளி தொகுப்புகள்
* ராஜபாளையம்
* கரூர்
* விருதுநகர்
* ஈரோடு
* திருப்பூர்
* கோவை
* மதுரை
* சேலம்
* திண்டுக்கல்
* முதலீட்டாளர்களுக்கான ஒதுக்கீடு
ஒதுக்கீட்டு நிலம் தொழிற்சாலைக்கான நிலம்
ஒதுக்கீடு செய்யப்படவுள்ள பரப்பளவு 600.83 ஏக்கர்
ஒரு ஏக்கருக்கு நிர்ணயிக்கப்பட்ட விலை ரூ.55.32 லட்சம்
சிறப்பம்சங்கள்
* தெளிவான நில உரிமை: 99 வருடத்திற்கு ஒப்பந்தம்
* சட்டபூர்வமான ஒப்புதல்கள்
* சுற்றுச்சூழல் அனுமதியுடன் கூடிய டிடிசிபியால் அங்கீகரிக்கப்பட்ட நில ஒதுக்கீடு
* தடையற்ற நீர், மின்சாரம்
* பூங்காவிற்குள் பிரத்யேக துணை மின் நிலையம்
* விரிவான உட்கட்டமைப்பு, சேமிப்பு கிடங்கு வசதிகளுடன் நவீன வசதிகள்
* ஜவுளி பூங்காவிலிருந்து தூத்துக்குடி துறைமுகம் 100 கிமீ தூரத்திலும், மதுரை விமான நிலையம் 50 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது.
* கனரக வாகனங்கள் நிறுத்தும் வசதி
* நிலத்தடியில் அமைக்கப்பட்டுள்ள பயன்பாட்டு கேபிள்கள்.