விருதுநகர் மாவட்டத்தில் புதுரக பட்டாசு விற்பனை படுஜோர்
ஏழாயிரம்பண்ணை: தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு விற்பனை படுஜோராக நடந்து வருகிறது. புதுரக பட்டாசுகளை மக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை பகுதியை சுற்றி 1,500க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளில் பட்டாசு உற்பத்தி நடைபெறுகிறது. பேரியம் நைட்ரேட் தடை, சரவெடி உற்பத்திக்கு தடை என பட்டாசு தொழிலுக்கு பல நெருக்கடிகள் வந்தாலும் தொடர்ந்து உற்பத்தி நடைபெற்று வருகிறது. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் வெம்பக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அனைத்து கடைகளிலும் பட்டாசு வாங்க மக்கள் முண்டியடித்துக் கொண்டிருக்கின்றனர்.
பட்டாசு விற்பனையாளர் கனகராஜ் கூறுகையில், ‘‘இந்த ஆண்டு, பீட்சா, வாட்டர் மெலன், பிஸ்கட் உள்ளிட்ட உணவுப் பொருட்களை நினைவுபடுத்தும் வகையில் பட்டாசுகளும், குழந்தைகளுக்காக கடாயுதம், வேல், கிட்டார், சிலிண்டர் உள்பட 30க்கும் மேற்பட்ட பல புதுரக பட்டாசுகளும் விற்பனைக்கு வந்துள்ளன. குறிப்பாக, பென்சில் வெடிகளும்கூட துப்பாக்கி வடிவில் குழந்தைகளை கவரும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றை மக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு பசுமை தீர்ப்பாய உத்தரவு, தொடர் ஆய்வு, 150 ஆலைகள் சஸ்பெண்ட் உள்ளிட்ட காரணங்களால் குறைவான பட்டாசுகளே உற்பத்தியாகியுள்ளது. இதனால் விலை உயர்ந்துள்ளது’’ என தெரிவித்தார்.
பட்டாசு வாங்க வந்த மணிகண்டன் தெரிவிக்கையில், ‘‘உற்பத்தி குறைவால் பட்டாசுகளின் விலை கடந்த ஆண்டை விட 10%ல் இருந்து 20% அதிகரித்துள்ளது. மேலும் ஆன்லைன் மற்றும் 90% தள்ளுபடி என பல்வேறு கடைகளில் விலைகளை அதிகரித்து பின்னர் தள்ளுபடி மூலம் குறைத்து தருவதாக மோசடிகள் நடைபெற்று வருகிறது. இதனால் பட்டாசு விலையில் பொதுமக்களுக்கு பல்வேறு குழப்பங்கள் எழுந்து வருகிறது. எனவே இதுபோன்ற தள்ளுபடி மோசடிகளை விற்பனையாளர்கள் தவிர்க்க வேண்டும்’’ என்றார்.