விராலிமலையில் தேசிய கொடியுடன் கோயில் கோபுரத்தில் ஏறி போராடியவர் பரிதாப பலி
விராலிமலை: விராலிமலை கோயில் கோபுரத்தில் தேசிய கொடியுடன் ஏறி போராட்டம் நடத்திய சமூக ஆர்வலர் தவறி விழுந்து உயிரிழந்தார். புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை முருகன் கோயில் சுற்றி உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், விராலிமலையில் மயில்கள் சரணாலயம் அமைக்கவும் வலியுறுத்தி அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் ஆறுமுகம்(44) நேற்று காலை தேசியக் கொடியுடன் விராலிமலை முருகன்கோயில் கோபுர உச்சிக்கு சென்று போராட்டம் நடத்தினார்.
தகவலறிந்த விராலிமலை தாசில்தார் ரமேஷ், இன்ஸ்பெக்டர் லதா உள்ளிட்டோர் கோபுரத்தின் அடியில் நின்று அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதை ஏற்காமல் ஆறுமுகம் போராட்டதை தொடர்ந்தார். இதையடுத்து மீட்பு குழுவினர் மேலே சென்று மீட்க முயன்ற போது அருகே நெருங்கினால் குதித்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதையடுத்து மேலே சென்றவர்கள் கீழே இறங்கினர்.
பின்னர் தாசில்தார் ரமேஷ், உங்கள் கோரிக்கை கட்டாயம் நிறைவேற்றப்படும், கீழே இறங்கி வாருங்கள் என்றதால் அவர் கீழே இறங்க தொடங்கினார். மீட்பு படையினர் உதவி செய்ய முற்பட்டபோது, யாரும் அருகில் வர வேண்டாம் எப்படி ஏறினேனோ அப்படி நானே இறங்கி கொள்கிறேன் என்று கூறிவிட்டார். கோபுரத்தில் இருந்த பொம்மைகளை பிடித்து இறங்கும்போது அவர் திடீரென தவறி சுமார் 40 அடி உயரத்தில் இருந்து தரைதளத்தில் விழுந்தார். இதில் தலையில் பலத்த அடிபட்டு ஆறுமுகம் உயிரிழந்தார்.