வைரலோ வைரல்
காட்டாற்றைக் கடந்த கமலாதேவி!
இமாச்சல பிரதேசத்தில் உள்ள, மண்டி எனும் மாவட்டத்தில் இருக்கிறது சௌகர் வேலி. இங்கே கடும் வெள்ளப்பெருக்குக் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் கிராமமும் காட்டாற்று வெள்ளத்தால் துண்டிக்கப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளதால், தரைப்பாலங்கள் உடைந்து ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது. இதே கிராமத்தில் கமலாதேவி என்கிற மருத்துவப் பணியாளர் வேலை செய்து வருகிறார்.பெருவெள்ளம் காரணமாக இந்த மருத்துவப் பணியாளர் கமலா தேவி, கிராமத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. ஆனால் அந்தக் கிராமத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி இருந்தது. எனவே குழந்தைகள் நலனில் அக்கறை கொண்டு பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தைப் பொருட்படுத்தாமல், பெரும் பாறைகளில் தாவிக் குதித்து அந்தக் கிராமத்திற்கு சென்றிருக்கிறார் கமலா தேவி. அவர் ஆற்றைக் கடந்து பாறையில் ஏறிச் செல்லும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கைகளில் செருப்பை வைத்துக் கொண்டு, தோள்பட்டையில் மருந்துகள் நிறைந்த பெட்டி, தனது பேக் என மாட்டிக்கொண்டு அவர் ஆற்றைக் கடந்து செல்லும் காட்சி தற்போது வைரலாகி வருகிறது. பலரும் கமலா தேவியின் சேவை குறித்து பாராட்டியும் வருகிறார்கள்.
எல்லை தாண்டிய சிறுவன்!
அமெரிக்கா, கனடா எல்லையில் சுழலும் கதவுகள் வைக்கப்பட்டுள்ளன. இந்தக் கதவில் சிறுவன் ஒருவன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது சிறுவன் தற்செயலாகக் கனடா எல்லைக்குள் சென்றுவிட கதவு பூட்டிக் கொண்டது. இதனைக் கண்ட பெற்றோர் கனடா எல்லைக்குள் நுழைந்த சிறுவனை எச்சரித்து அழைக்க அவனோ எதையும் பொருட்படுத்தாமல் அங்கேயே நின்று கொண்டிருந்தான். பொதுவாக குழந்தை என்றால் சட்ட விதிகளின்படி விட்டுவிடுவார்கள். ஆனால் பெரியவர்கள் அனுமதி பெறாமல் உள்ளே நுழைய முடியாது. எனவே குடும்பமாக அந்த வீடியோவில் சிறுவனை அழைத்து எச்சரிக்கிறார்கள். இந்த வீடியோ காட்சிகள் வைரலான நிலையில் கணப்பொழுதில் சிறுவன் ஒரு நாட்டையே கடந்துவிட்டான் என உற்சாகமாக அச்சிறுவனின் வீடியோவை எல்லோரும் கண்டு பகிர்ந்து வருகிறார்கள். இன்னும் சில குறும்புக்கார நெட்டிசன்கள் அந்தச் சிறுவன்தான் மிகவும் புத்திசாலியானவன். அற்புதமாக அமெரிக்காவை விட்டுத் தப்பித்துவிட்டான் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். எனினும் பெற்றோர்கள் இப்படி அலட்சியமாக இருந்தால் இப்படித்தான் குழந்தைகள் நாடு விட்டு நாடு கூட கடந்துவிடுவார்கள் எனவும் சில விமர்சனங்கள் எழுந்துள்ளன.