வைரலோ வைரல்
கண்டித்த அஜித்!
நடிகர் அஜித்குமார் இப்போது சர்வதேச கார் பந்தயங்களில் பங்கேற்று வருகிறார். இதற்காக ‘அஜித்குமார் ரேஸிங்’ என்ற அணியை அவர் வைத்துள்ளார். இந்த அணி, உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் கார் பந்தயங்களில் பங்கேற்று வருகிறது. துபாய், இத்தாலி, ஸ்பெயின் நாடுகளில் நடைபெற்ற ரேஸ்களில் பங்கேற்ற அவர் அணி, பார்சிலோனாவில் நடந்த கார் பந்தயத்தில் கடந்த வாரம் பங்கேற்றது. அங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை அஜித்குமாரை பார்க்க ரசிகர்கள் கூடினர். அதில் சிலர், அஜித்குமாரை பார்த்ததும் ஆரவாரம் செய்து விசிலடித்தனர்.இதைக் கவனித்த அஜித் கோபமடைந்தார். விரலை அசைத்து, ‘அமைதியாக இருங்கள்’ என்ற சைகை செய்தார். உடனே ரசிகர்கள் ஆரவாரத்தை நிறுத்தி அமைதியானார்கள். இந்தக் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. அஜித், பார்சிலோனா பந்தயத்தை முடித்துவிட்டு துபாய் திரும்பி இருக்கிறார். அடுத்து மலேசியாவில் டிசம்பர் மாதம் நடக்கும் கார் பந்தயத்தில் பங்கேற்க இருக்கிறார்.
ஒரு மணி நேரத்தில் 733 புல் அப்ஸ்கள்... உலக சாதனை படைத்த பெண்!
ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஜேட் ஹென்டர்சன் என்பவர் காவல் அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். வாழ்வில் ஏதேனும் சாதிக்க வேண்டும் என எண்ணிய ஜேட் ஹென்டர்சன், புல் அப்ஸ் உலக சாதனையை முறியடிக்க எண்ணியுள்ளார்.இதற்காக 24 மணி நேரத்தில் 7,079 புல் அப்ஸ்கள் எனும் உலக சாதனையை முறியடிக்கத் தீவிர பயிற்சி மேற்கொண்டார். அதன்படி அவர் 3500 புல் அப்ஸ்களை செய்து கொண்டிருந்தபோதே தசை நார் கிழிந்து பாதிக்கப்பட்டார்.இருப்பினும், சாதனையை கைவிட மனமில்லாத ஜேட் ஹென்டர்சன், தனது இலக்கை 24 மணி நேரத்திலிருந்து ஒரு மணி நேரமாக மாற்றிக் கொண்டார்.அதன்படி சுமார் 6 வார ஓய்வுக்கு பிறகு களமிறங்கிய ஜேட் ஹென்டர்சன், ஒரு மணி நேரத்தில் 733 புல் அப்ஸ்களை எடுத்து கின்னஸ் உலக சாதனையை படைத்தார். முன்னதாக ஒரு மணி நேரத்தில் 725 புல் அப்ஸ்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது. ஜேட் ஹென்டர்சன் 10 வருட முந்தைய சாதனையை முறியடித்து அசத்தியுள்ளார். ஜெட்டின் இந்த சாதனை கண்டு உலக மல்யுத்த வீரர்களே ஆச்சர்யத்தில் ஆழ்ந்துள்ளனர். மேலும் ஜேட்டுக்கு பாராட்டுகளும் குவிந்து வருகிறது.