வன்முறையால் பாதிக்கப்பட்ட பிறகு முதல்முறையாக பயணம் மணிப்பூரை அமைதி, செழிப்பின் அடையாளமாக மாற்றுவோம்: சூரசந்த்பூரில் பிரதமர் மோடி பேச்சு
சூரசந்த்பூர்: ‘நான் உங்களுடன் இருக்கிறேன். இந்திய அரசு மணிப்பூர் மக்களுடன் உள்ளது. வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரை அமைதி, செழிப்பின் அடையாளமாக மாற்றும் இலக்கை நோக்கி நாங்கள் செயல்பட்டு வருகிறோம்’ என பிரதமர் மோடி கூறி உள்ளார். வடகிழக்கு மாநிலங்களான மிசோரம், மணிப்பூர், அசாம் மற்றும் மேற்குவங்கம், பீகாரில் மொத்தம் ரூ.71,850 கோடியில் வளர்ச்சித்திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவது மற்றும் முடிவடைந்த பணிகளை தொடங்கி வைக்க பிரதமர் மோடி 3 நாள் பயணத்தை நேற்று தொடங்கினார். முதலில் மிசோரம் சென்ற அவர் ஐஸ்வாலில் ரூ.9,000 கோடியில் பல்வேறு திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பேசினார். அப்போது பேசிய அவர், ‘‘வாக்கு வங்கி அரசியலில் கடுமையாக பாதிக்கப்பட்ட வடகிழக்கு மாநிலங்கள் தற்போது தேசத்தின் வளர்ச்சி இன்ஜின்களாக மாறி இருக்கின்றன’’ என்றார்.
அதைத் தொடர்ந்து மணிப்பூர் சென்ற பிரதமர் மோடி, சூரசந்த்பூரில் ரூ.7,300 கோடி மதிப்பில் வளர்ச்சித் திட்டப்பணிகளையும், பின்னர் இம்பாலில் ரூ.1,200 கோடியில் திட்டப்பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார். மணிப்பூரில் கடந்த 2023ல் இனக்கலவரம் ஏற்பட்டு 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானவர்கள் வீடுகளை இழந்து இன்றும் முகாம்களில் வசிக்கின்றனர். இதுவரையிலும் அமைதி திரும்பாத நிலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு பிரதமர் மோடி முதல் முறையாக மணிப்பூர் சென்றுள்ளார்.
சூரசந்த்பூரில் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: வளர்ச்சி எங்கும் வேரூன்ற அமைதி அவசியம். கடந்த 11 ஆண்டுகளில் வடகிழக்கில் பல மோதல்கள், சச்சரவுகள் தீர்க்கப்பட்டுள்ளன. மக்கள் அமைதியின் பாதையை தேர்ந்தெடுத்து வளர்ச்சிக்கு முன்னுரிமை அளித்துள்ளனர். சிறிது நேரத்திற்கு முன்பு, இங்கு பாதிக்கப்பட்ட மக்களை ஒரு நிவாரண முகாமில் சந்தித்தேன். அவர்களை சந்தித்த பிறகு மணிப்பூரில் நம்பிக்கையின் புதிய விடியல் உதயமாகி வருகிறது என்பதை என்னால் உறுதியுடன் கூற முடியும். மணிப்பூரில் வன்முறை நிகழ்ந்தது துரதிஷ்டவசமானது. இங்குள்ள அனைத்து அமைப்புகளும் அமைதியின் பாதையில் முன்னேறிச் சென்று, மக்களின் கனவுகளை நிறைவேற்ற வேண்டுமென நான் கேட்டுக் கொள்கிறேன்.
நான் உங்களுடன் இருக்கிறேன். இந்திய அரசு மணிப்பூர் மக்களுடன் உள்ளது. மணிப்பூரை அமைதி, செழிப்பு, முன்னேற்றத்தின் அடையாளமாக மாற்றும் இலக்கை நோக்கி நாங்கள் பாடுபடுகிறோம். ஒன்றிய அரசின் திட்டங்கள் மணிப்பூருக்கு வந்தடைய முன்பு பல ஆண்டுகள் ஆகின. இப்போது நாட்டின் பிற பகுதிகளுடன் சேர்ந்து மணிப்பூரும் முன்னேறி வருகிறது. இங்கு நல்ல பள்ளிகள், மருத்துவக் கல்லூரி, மருத்துவமனைகளை நாங்கள் கொண்டு வந்துள்ளோம். வளர்ச்சியின் பலன்கள் நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் சென்றடைவதை நான் உறுதி செய்ய விரும்புகிறேன். தற்போது அடிக்கல் நாட்டப்பட்ட ரூ.7,300 கோடிக்கான பணிகள் மணிப்பூர் மக்களின், குறிப்பாக மலைப்பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்க்கையை மேலும் மேம்படுத்தும். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார். முன்னதாக பிரதமர் மோடி மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டரில் செல்லாமல் மணிப்பூர் தலைநகர் இம்பாலில் இருந்து சூரசந்த்பூருக்கு 60 கிமீ தூரம் காரில் சென்றார். மணிப்பூரை தொடர்ந்து பிரதமர் மோடி நேற்று மாலை அசாம் சென்றடைந்தார்.
* சம்பிரதாயத்துக்கு வந்து போறாரு: காங்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நேற்று தனது எக்ஸ் பதிவில், ‘‘பிரதமர் மோடியின் மணிப்பூர் பயணம் வெறும் சம்பிரதாயமானது. 3 மணி நேரம் மட்டுமே மணிப்பூரில் தங்குவது அம்மாநில மக்கள் மீது காட்டும் இரக்கம் அல்ல, காயமடைந்த மக்களுக்கு செய்யும் கடுமையான அவமானம். வன்முறை நடந்து 864 நாட்கள் ஆகி விட்டது, 300 உயிர்கள் பலி, 67,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர், 1,500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அதன் பிறகு நீங்கள் 46 வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டீர்கள். ஆனால் மணிப்பூர் மக்களுடன் 2 வார்த்தைகள் அனுதாபத்தைப் பகிர்ந்து கொள்ள ஒருமுறை கூட பயணம் செய்யவில்லை. மணிப்பூருக்கு நீங்கள் கடைசியாக வந்தது 2022 ஜனவரியில், அதுவும் தேர்தலுக்காக’’ என்றார்.
* சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிராக நடவடிக்கை
பொதுக் கூட்டத்தில் பேசிய மணிப்பூர் ஆளுநர் அஜய்குமார் பல்லா, ‘‘எங்கள் நிலத்தை எல்லைகளுக்கு அப்பால் உள்ள மக்கள் ஆக்கிரமிப்பதை நாங்கள் அனுமதிக்க முடியாது. இந்த சவாலை எதிர்கொள்ள மாநில அரசும், ஒன்றிய அரசும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க உறுதிபூண்டுள்ளன. மணிப்பூரில் இனக்கலவரத்தால் இடம்பெயர்ந்தவர்களை மறுவாழ்வு செய்வதற்காக 3 கட்டமாக மீள்குடியேற்றத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.