தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி கோலாகல கொண்டாட்டம்
* அதிகாலை முதல் கோயில்களில் சிறப்பு பூஜை
* பக்தர்கள் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்
சென்னை: தமிழகம் முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி ஆன்மிக உற்சாகத்துடன் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி, இந்து மதத்தின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாகும். ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி திதியில் கொண்டாடப்படும் இந்த விழா, தடைகளை நீக்கி, வெற்றி, செல்வம், மற்றும் அமைதியை அருளும் விநாயகப் பெருமானின் அவதார தினமாகப் பக்தர்களால் போற்றப்படுகிறது. இந்த புனித நாளில், விநாயகரை வழிபடுவது புதிய முயற்சிகள், கல்வி, அல்லது தொழிலைத் தொடங்குவதற்கு சிறந்ததாகக் கருதப்படுகிறது. வீடுகளிலும், பொது இடங்களிலும் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டு, அருகம்புல், எருக்கம்பூ, மோதகம், கொழுக்கட்டை, சுண்டல், வாழைப்பழம் உள்ளிட்டவை நைவேத்தியமாகப் படைக்கப்படுகின்றன. விழாவின் முடிவில், சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, நீர்நிலைகளில் கரைக்கப்படுகின்றன.
இது பக்தர்களின் கவலைகளை விநாயகர் அகற்றுவதாக நம்பப்படுகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதி, இயற்கையான களிமண் சிலைகள் பயன்படுத்தப்படுவது இன்று பரவலாக ஊக்குவிக்கப்படுகிறது. அதன்படி இன்று தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி ஆன்மிக உற்சாகத்துடன் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. சென்னையில், இந்த விழாவை முன்னிட்டு, அதிகாலை முதல் கோயில்களில் சிறப்பு பிரார்த்தனைகள் மற்றும் பூஜைகள் நடைபெற்று வருகின்றன. பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில், திருச்சி உச்சிப்பிள்ளையார் கோயில், சென்னை மணக்குள விநாயகர் கோயில் உள்பட தமிழகம் முழுவதும் அனைத்து கோயில்களிலும் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. பக்தர்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்ய, கோயில் நிர்வாகங்கள் தடுப்புகள் அமைத்து, ஒழுங்கு மிக்க ஏற்பாடுகளைச் செய்துள்ளன.
நேற்று மாலை முதல், சென்னையின் கோயம்பேடு, மயிலாப்பூர், புரசைவாக்கம், தி.நகர், திருவான்மியூர், பிராட்வே, வடபழனி, சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பஜார் வீதிகளில் பூஜைப் பொருட்கள் வாங்குவதற்காக மக்கள் கூட்டம் அலைமோதியது. சாலையோரங்களில் தற்காலிகக் கடைகள் அமைக்கப்பட்டு, பொரி, ஆப்பிள், ஆரஞ்சு, சாத்துக்குடி, மக்காச்சோளம், கொய்யாப்பழம், கரும்பு, தென்னங்கீற்று ஆகியவை உற்சாகமாக விற்பனை செய்யப்பட்டன. விலை உயர்ந்திருந்த போதிலும், பக்தர்கள் ஆன்மிக உற்சாகத்துடன் பொருட்களை வாங்கிச் சென்றனர். சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பூக்கள், பழங்கள், மற்றும் வாழை இலைகளின் விலைகள் கடுமையாக உயர்ந்தன. சென்னை, புறநகர் மற்றும் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த சில்லரை வியாபாரிகள் அதிக அளவில் குவிந்ததால், மார்க்கெட் களைகட்டியது.
மல்லிகை விலை ரூ.900-ல் இருந்து ரூ.1,300 வரை உயர்ந்தது. ஜாதிமல்லி/முல்லை ரூ.750-ல் இருந்து ரூ.900 ஆகவும் ஐஸ் மல்லி ரூ.1,100, கனகாம்பரம் ரூ.500-ல் இருந்து ரூ.2,000, சாமந்தி ரூ.200-ல் இருந்து ரூ.350, சம்பங்கி ரூ.200-ல் இருந்து ரூ.500, அரளி ரூ.200-ல் இருந்து ரூ.350, பன்னீர் ரோஸ் ரூ.160-ல் இருந்து ரூ.180, சாக்லேட் ரோஸ் ரூ.160-ல் இருந்து ரூ.280 ஆக உயர்ந்தது. அருகம்புல்/எருக்கம்பூ மாலை (ஒரு கட்டு) ரூ.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. பழங்களின் விலையும் உயர்ந்துள்ளது. ஒரு தலை வாழை இலை ரூ.20-ல் இருந்து ரூ.30வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மொத்த வியாபாரிகள் இந்த விலைகளில் விற்றாலும், சில்லரை வியாபாரிகள் கிலோவுக்கு ரூ.20 முதல் ரூ.25 வரை கூடுதலாக விற்றனர். விசேஷ தினங்கள் மற்றும் முகூர்த்த நாட்களால், இன்று காலை முதல் விற்பனை மேலும் அதிகரித்து வருவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
விநாயகர் சிலைகள்
விநாயகர் சிலைகள் ரூ.50 முதல் ரூ.1,000 வரை விற்பனையாகின. குடைகள் ரூ.50 முதல் விற்கப்பட்டன. சென்னையில், 3 அடி முதல் 15 அடி உயரம் வரையிலான சிலைகள் பூஜைக்காக அமைக்கப்பட உள்ளன. இந்து அமைப்புகள் 2,000-க்கும் மேற்பட்ட சிலைகளுக்கு மனு அளித்திருந்தாலும், பாதுகாப்பு காரணங்களால் 1,519 சிலைகளுக்கு மட்டுமே சென்னை காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. அலங்காரப் பணிகள் மும்முரமாக நடைபெறுகின்றன. பக்தர்களை கவரும் வகையில் பந்தல்கள் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பு ஏற்பாடுகள்
சென்னை காவல்துறை ஆணையர் அருண் உத்தரவுப்படி, கூடுதல் ஆணையர்கள் கண்ணன், பிரவேஷ்குமார், கார்த்திகேயன் ஆகியோரின் மேற்பார்வையில், 16,500 காவலர்கள் மற்றும் 1,500 ஊர்க்காவல் படை வீரர்கள் உட்பட 18,000 பேர் பாதுகாப்பு மற்றும் ரோந்து பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். புளியந்தோப்பு, திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை போன்ற பதட்டமான பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட பகுதிகளிலோ, இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் இடங்களிலோ சிலைகள் அமைக்க முயற்சித்தால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது. சென்னையின் 105 சட்டம்-ஒழுங்கு காவல் நிலையங்களில் 24 மணி நேரமும் பாதுகாப்பு மற்றும் ரோந்து பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.