விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை ஆசிரியருக்கு பெற்றோர் தர்ம அடி: போக்சோவில் கைது
விழுப்புரம்: விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 6ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை பள்ளிக்குள் புகுந்து பெற்றோர் தர்மஅடி கொடுத்தனர். விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு படிக்கும் விழுப்புரம் பகுதியை சேர்ந்த 6ம் வகுப்பு மாணவி கடந்த சில நாட்களாக பள்ளி செல்ல மறுத்துள்ளார். மாணவியிடம் பெற்றோர் விசாரித்தபோது ஆசிரியர் பாலியல் தொல்லையில் ஈடுபடுவதாகவும் இதனால் உடல் வலிப்பதாகவும் கூறியுள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் நேற்று முன்தினம் மாலையே சம்மந்தப்பட்ட தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்துள்ளனர். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனிடையே நேற்று, பாலியல் தொல்லைக்குள்ளான மாணவியை அழைத்து கொண்டு பெற்றோர், உறவினர்கள் பள்ளிக்கு சென்றனர். அங்கு வகுப்பறையில் இருந்த அந்த ஆசிரியரை பார்த்ததும் தர்மஅடி கொடுத்துள்ளனர்.தகவலறிந்து நகர காவல் நிலைய போலீசார் வந்து அவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். விசாரணையில் பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட ஆசிரியர், விழுப்புரம் அருகே முகையூரை சேர்ந்த பால்வில்சன்(48) என்பது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து பொதுமக்கள் பள்ளிமுன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஆசிரியர் பால்வில்சனை போலீஸ் ஜீப்பில் ஏற்றி காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து சைல்டு லைன் அமைப்பினரும் பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியர், மாணவிகள், சக ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர். இதனைதொடர்ந்து இந்த வழக்கு விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. இதுகுறித்து போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்த போலீசார் ஆசிரியர் பால்வில்சனை கைது செய்தனர்.