விழுப்புரம் மாவட்டத்தில் கோஷ்டி பூசல்; தவெக மகளிர் அணி தலைவி மீது தாக்குதல்: நிர்வாகிகள் 3 பேர் மீது வழக்கு
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட தவெகவில் கோஷ்டி மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் மகளிர் அணி தலைவியை தாக்கியதாக புகாரின்படி நிர்வாகிகள் 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.விழுப்புரம் மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தில் கடந்த சில மாதங்களாக உட்கட்சி மோதல் அதிகரித்து வருகிறது.
நலத்திட்ட உதவிக்கு பணம் வாங்குதல், கட்சி பதவிகளுக்கு பணம் வசூலிப்பது போன்ற புகாரில் நிர்வாகிகள் மத்தியில் மோதல் நடந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நலத்திட்ட உதவிக்கு பணம் வழங்காததால் நகர செயலாளரை தடியால் தாக்கி விரட்டி அடித்த புகாரில் மாவட்ட செயலாளர் குஷிமோகன் உள்ளிட்ட 6 பேர் மீது விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு தவெக மாவட்ட மகளிர் அணி ஆலோசனை கூட்டம் நடந்துள்ளது. இதிலும் மோதல் நடந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தவெக மகளிர் அணி நகர துணை செயலாளர் அஞ்சுகம் விழுப்புரம் தாலுகா போலீசில் அளித்த புகாரில், மகளிர் ஆலோசனை கூட்டத்துக்கு தவெக நிர்வாகி இப்ராகிம் சுகர்ணா தூண்டுதலின் பேரில் முபாரக், சுனில் ஆகியோர் சேர்ந்து மாவட்ட மகளிர் அணி தலைவி பிரேமாவையும், என்னையும் சரமாரியாக தாக்கினர் என்று கூறியுள்ளார். அதன் பேரில் இப்ராகிம் சுகர்னா, முபாரக், சுனில் ஆகிய 3 பேர் மீது தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.