வில்லுக்குறியில் பஸ்சில் மூதாட்டியின் செயின் திருட்டு
*தப்பி ஓட முயன்ற 2 பெண்கள் கைது
திங்கள்சந்தை : நாகர்கோவில் அருகே ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் நகை பறித்து விட்டு தப்பி ஓட முயன்ற 2 பெண்களை பயணிகள் சுற்றி வளைத்து பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே உள்ள காஞ்சிரங்கோடு பகுதியை சேர்ந்தவர் ராஜமணி.
இவரது மனைவி சேசம்மாள் (75). இவர் நேற்று முன்தினம் கலெக்டர் அலுவலகம் சென்று விட்டு அரசு பஸ்சில் வந்து கொண்டிருந்தார். வில்லுக்குறி பாலம் அருகே வந்த போது, சேசம்மாள் கழுத்தில் இருந்த சுமார் மூன்று பவுன் தங்க செயினை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்து கூச்சல் போட்டார். உடனே பஸ்சை டிரைவர் நிறுத்தினார்.
பஸ்சில் இருந்த பயணிகளிடம் விசாரித்த போது, அந்த பஸ்சில் இருந்த 2 பெண்கள் அங்கிருந்து நைசாக தப்பி ஓட முயன்றனர். உடனடியாக மற்ற பயணிகள் அந்த இரு பெண்களையும் சுற்றி வளைத்து பிடித்தனர்.
பின்னர் இரணியல் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து இரு பெண்களையும் விசாரணைக்காக அழைத்து சென்றனர். அவர்களிடம் எஸ்.ஐ. ஆன்றோ பெபின் தலைமையில் போலீசார் விசாரித்தனர்.
இதில் அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் அண்ணாநகரை சேர்ந்த பவானி (29), மீனாட்சி (29) என்பதும், அவர்கள் தான் மூதாட்டி சேசம்மாளிடம் நகையை நைசாக திருடியதும் தெரிய வந்தது. இதையடுத்து, அந்த நகையை கைப்பற்றிய போலீசார் அவர்களை கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தக்கலை சிறையில் அடைத்தனர்.
இவர்கள் மீது குமரி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் நகை திருடிய வழக்கு இருப்பது தெரிய வந்துள்ளது. இவர்கள் கும்பலாக குமரி மாவட்டத்துக்குள் ஊடுருவி பஸ்களில் கைவரிசை காட்டி வருகிறார்கள்.
இவர்களுடன் சேர்ந்த மேலும் சில பெண்கள், நகை திருட்டுக்காக குமரி மாவட்டத்துக்குள் ஊடுருவி உள்ளதும் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக சிறையில் உள்ள 2 பெண்களையும் காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.