ஒரு மாதமாக குடிநீர் விநியோகிக்காததை கண்டித்து காலி குடங்களுடன் கிராம மக்கள் மறியல்
*முக்கூடல் அருகே பரபரப்பு
பாப்பாக்குடி : முக்கூடல் அருகே கடந்த 1 மாதமாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததை கண்டித்து காலி குடங்களுடன் கிராம மக்கள் திடீரென சாலை மறியல் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.முக்கூடல் அருகே பாப்பாக்குடி ஒன்றியத்திற்குட்பட்ட இலந்தைகுளம் கிராமத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இப்பகுதி மக்களுக்கு தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஒரு மாத காலமாக இப்பகுதியில் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து பொதுமக்கள் பல முறை புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் உள்பட சுமார் 100க்கும் மேற்பட்டோர் நேற்று காலை 11 மணியளவில் காலி குடங்களுடன் முக்கூடல் - ஆலங்குளம் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். தகவலின் பேரில் பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் ஊழியர்களும் மற்றும் பாப்பாக்குடி போலீசாரும் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது விரைவில் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.