பொட்டலூரணி விலக்கில் பேருந்துகள் நின்று செல்ல கோரி நெல்லை - தூத்துக்குடி சாலையில் கிராம மக்கள் திடீர் மறியல் முயற்சி
*பேச்சுவார்த்தையில் உடனடி தீர்வு
தூத்துக்குடி : பொட்டலூரணி விலக்கில் பேருந்துகள் நின்று செல்லவும், தனி பஸ் நிறுத்தம் கேட்டும் கிராம மக்கள் நெல்லை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டம் நடத்த முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
நெல்லை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் தெய்வச்செயல்புரம் அருகே பொட்டலூரணி விலக்கு பேருந்து நிறுத்தம் முக்கிய சந்திப்பு பகுதியாகும். இந்த பேருந்து நிறுத்தத்தில் இருந்து தான் பொட்டலூரணியை சுற்றியுள்ள கிராம மக்கள் பேருந்துகளில் ஏறி, இறங்கிச் செல்வது வழக்கம். சமீபகாலமாக பொட்டலூரணி விலக்கில் பேருந்துகள் சரிவர நிற்காமல் சென்று விடுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
எனவே பொட்டலூரணி விலக்கில் அனைத்து பேருந்துகளும் நின்று செல்ல வேண்டும், பொட்டலூரணி விலக்கிற்கு தனி நிறுத்தம் வேண்டும் என்று வலியுறுத்தி கிராம மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் தனி ஸ்டேஜ் வழங்காமல் வாகைகுளம் கட்டணத்தையே வசூலித்து வந்தனர். இதனால் கடந்த 2-ம் தேதி கிராம மக்கள் நெல்லை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட அதிகாரிகள் 3 நாட்களுக்குள் பொட்டலூரணி விலக்கு தனி ஸ்டேஜ்க்கான முறையான ஆணை பெற்றுத்தருவதாக கூறினர். இதனால் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
ஆனால் நேற்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதால் நேற்று காலை தூத்துக்குடி - நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் பொட்டலூரணி கிராம மக்கள் பொட்டலூரணி விலக்கு பகுதியில் திரண்டு மறியலில் ஈடுபட முயன்றனர். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த தூத்துக்குடி ரூரல் டிஎஸ்பி சுதிர், ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் ரத்னாசங்கர் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
உரிய ஆணை விரைவில் வந்து விடும் அதுவரை மறியல் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டனர். அதன்பேரில் பொதுமக்கள் சாலையோரத்தில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். சிறிது நேரத்துக்கு பிறகு பொட்டலூரணி தனி ஸ்டேஜ் என்பதற்கான ஆணையும், பொட்டலூரணி பேருந்து நிறுத்தத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில் மண்டலங்களைச் சேர்ந்த பேருந்துகளை முறையாக நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்கி செல்லவும் போக்குவரத்து கழக பொதுமேலாளர் (வணிகம்) சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த உத்தரவை அதிகாரிகள் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் சங்கரநாராயணனிடம் வழங்கினர். வருகிற 12-ம் தேதி முதல் இந்த உத்தரவு நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் தங்கள் கோரிக்கை ஏற்கப்பட்டதால் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.