நிலச்சரிவில் புதையுண்ட கிராமம் சூடானில் 1,000 பேர் பலி: ஒருவர் மட்டும் உயிர் பிழைத்த அதிசயம்
கெய்ரோ: சூடான் நாட்டில் அல் புர்ஹான் தலைமையிலான ராணுவத்துக்கும், முகமது ஹம்தான் டகலோ தலைமையிலான ஆர்எஸ்எப் துணை ராணுவத்துக்கும் இடையே அதிகாரப்போட்டி காரணமாக கடந்த 2023ம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இந்த மோதலில் 40,000க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்து விட்டனர். மேலும் கோடிக்கணக்கான மக்கள் புலம் பெயர்ந்துள்ளனர்.
இதில் குறிப்பாக வடக்கு தார்பூர் பகுதியில் வீடுகளை விட்டு வௌியேற்றப்பட்ட மக்கள் சூடான் விடுதலை இயக்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மேற்கு சூடானின் மர்ரா மலைப்பகுதிகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். இந்நிலையில் மர்ரா மலைப்பகுதிகளில் உள்ள டார்பரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் கனமழை பெய்து வருவதால் நாடு முழுவதும் வௌ்ளத்தில் மிதக்கிறது. இதனால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அதன்ஒரு பகுதியாக தாராசின் கிராமத்தில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் அந்த கிராமமே அடியோடு மண்ணில் புதைந்து விட்டது.
இதுகுறித்து சூடான் விடுதலை இயக்க ராணுவம் வௌியிட்டுள்ள அறிக்கையில், “தொடர் கனமழை காரணமாக தாராசின் கிராமம் முழுவதும் நிலச்சரிவில் மூழ்கி தரைமட்டமாகி விட்டது. இதில் இந்த கிராமத்தில் வசித்து வந்த 1,000 பேர் உயிரிழந்து விட்டனர். ஒருவர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார். கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பகுதியில் சடலங்களை மீட்கவும், ஐநா மற்றும் சர்வதேச தொண்டு நிறுவனங்கள் உதவ வேண்டும்” என வேண்டுகோள் விடுத்துள்ளது.