பணி வழங்க கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை
*100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் போராட்டம்
சத்தியமங்கலம் : பணி வழங்க கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் கிராம ஊராட்சிகளில் உள்ள ஏழை குடும்பங்களை சேர்ந்த தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை வழங்கப்படுகிறது.
இந்த நிலையில், இந்த ஆண்டு இத்திட்டத்திற்கு ஒன்றிய அரசு நிதி ஒதுக்கீட்டை குறைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் பவானிசாகர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கு சரி வர வேலை வழங்கப்படாததால் பாதிக்கப்பட்ட 700க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேற்று காலை 100 நாள் வேலை திட்ட தொழிலாளர் சங்கத்தின் மாநில செயலாளர் மகேந்திரன் தலைமையில் பவானிசாகர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
100 நாள் வேலை திட்டத்தில் உடனடியாக பணி வழங்க வேண்டும், ஒன்றிய அரசு 100 நாள் வேலை திட்டத்திற்கு நிதி ஒதுக்கீட்டை குறைக்காமல் உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், சங்க நிர்வாகிகள் வேலுமணி, திருப்பூர் குணா ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். மேலும், தொழிலாளர்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து பவானிசாகர் போலீசார் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். விரைவில் தொழிலாளர்களுக்கு இத்திட்டத்தில் வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
இதேபோல் சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்தில் 200க்கும் மேற்பட்ட 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.