விக்கிரவாண்டி-தஞ்சாவூர் 4 வழிச்சாலை விரிவாக்க திட்டத்தின் 2ம் கட்ட பணி முடிந்து திறக்கப்பட்டது: பிஐபி விளக்கம்
முழுமையாக முடிவடையாத இத்திட்டத்தை பிரதமர் மோடி 2வது முறையாக திறந்து வைப்பதாக செய்திகள் வெளியான நிலையில், இத்திட்டம் குறித்து பத்திரிகை தகவல் பணியகம் (பிஐபி) நேற்று விளக்கம் அளித்துள்ளது. அதன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: விக்கிரவாண்டி-தஞ்சாவூர் இடையே 164.28 கிமீ நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலை-36ஐ 4 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணிகள் 3 கட்டமாக பிரிக்கப்பட்டன.
அதில், 65.96 கிமீ தூரமுள்ள விக்கிரவாண்டி-சேத்தியாத்தோப்பு பகுதி முதல் கட்டமாகவும், 50.48 கிமீ தூரமுள்ள சேத்தியாத்தோப்பு-சோழபுரம் பகுதி 2ம் கட்டமாகவும், 47.84 கிமீ தூரமுள்ள சோழபுரம்-தஞ்சாவூர் பகுதி 3வது கட்டமாகவும் பிரித்து பணிகள் நடைபெற்றன. இதில், 3ம் கட்டமான சோழபுரம்-தஞ்சாவூர் வரையிலான பணிகள் முடிக்கப்பட்டு, அதனை பிரதமர் மோடி கடந்த 06.04.2025ல் நாட்டிற்கு அர்ப்பணித்தார்.
அதைத் தொடர்ந்து சேத்தியாத்தோப்பு-சோழபுரம் வரையிலான 2ம் கட்ட சாலை விரிவாக்க பணிகள் முடிவுற்ற நிலையில் அவற்றை ஜூலை 26ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். எஞ்சியுள்ள முதல்கட்டமான விக்கிரவாண்டி முதல் சேத்தியாத்தோப்பு வரையிலான பகுதியில் ஒப்பந்ததாரின் மோசமான திட்டமிடல் உள்ளிட்ட காரணங்களால் பணிகள் தடைபட்டு கடந்த ஆண்டு பணிகள் நிறுத்தப்பட்டன. பின்னர், மீண்டும் கடந்த ஜூன் மாதம் முதல் பணிகள் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. இப்பணிகள் இன்னும் 2 ஆண்டுகளில் நிறைவு செய்யப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.