விக்கிரவாண்டி - தஞ்சாவூர் இடையே 10 ஆண்டுகளாக நடக்கிறது: முழுமையாக முடியாத தேசிய நெடுஞ்சாலை: 2வது முறையாக திறந்து வைத்தார் பிரதமர் மோடி
இவர்களின் வருகைக்காக முழுமையாக முடிவடையாமல் மக்கள் பயன்பாட்டிற்கு வராத திட்டங்களையும் திறந்து வைத்துவிட்டு செல்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. அப்படித்தான் தமிழகத்தில் டெல்டா மாவட்டத்திற்கு செல்லக்கூடிய முக்கிய நான்குவழிச்சாலை பணிகள் 10 ஆண்டுகளாகியும் முடிவடையாமல் கிடப்பில் போடப்பட்ட நிலையில் இந்த சாலையை 2வது முறையாக பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்து உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் முக்கிய நகரங்களுக்கு நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி சென்னையில் இருந்து கும்பகோணம், தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களுக்கு செல்ல விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வரை நான்கு வழிச்சாலை உள்ளது. எனவே விக்கிரவாண்டியில் இருந்து தஞ்சாவூர் வரையிலான 165 கிலோ மீட்டர் தூரமுள்ள சாலை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ் 4 வழிச்சாலையாக கடந்த 2006ம் ஆண்டு தரம் உயர்த்தப்பட்டது.
இதையடுத்து 2010ம் ஆண்டில் அதற்கான திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு கடந்த 2015ம் ஆண்டு விக்கிரவாண்டி-தஞ்சாவூர் இடையேயுள்ள சாலையையும், வழியில் உள்ள பாலங்களையும் புதிதாக அமைக்க ரூ.1,200 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து இச்சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக ஏற்படுவதாலும், நேரம் வீணாவதை கருத்தில் கொண்டும் விபத்தில்லா சாலைகளை அமைக்கும் வகையிலும் ஒன்றிய அரசு கடந்த 2017ம் ஆண்டு மேலும் ரூ.3,517 கோடி ஒதுக்கீடு செய்தது.
இதையடுத்து விக்கிரவாண்டியில் இருந்து தஞ்சாவூர் வரை 4 வழிச்சாலை அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டு சாலை பணிகளை விரைந்து முடிக்கும் வகையில் 3 பிரிவுகளாக பிரித்து பணிகள் தொடங்கப்பட்டன. தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ் தனியார் ஒப்பந்த நிறுவனம் (ரிலையன்ஸ்) மூலம் விக்கிரவாண்டியில் இருந்து சேத்தியாத்தோப்பு பின்னலூர் வரை 66 கி.மீ. தூரத்துக்கு ஒரு பிரிவாகவும், சேத்தியாத்தோப்பில் இருந்து தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சோழபுரம் வரை 51 கி.மீ. தூரத்துக்கு 2வது பிரிவாகவும், சோழபுரத்தில் இருந்து தஞ்சாவூர் வரை 48 கி.மீ. தூரத்துக்கு 3வது பிரிவாகவும் பணிகள் ஒதுக்கப்பட்டன.
இதற்கான சாலை விரிவாக்க பணிகள் கடந்த 2018ம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கப்பட்டது. விக்கிரவாண்டி-தஞ்சாவூர் இடையே 4 வழிச்சாலை அமையும் இடங்கள் வழியாக வெள்ளியனூர், பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சேத்தியாத்தோப்பு, அணைக்கரை, திருப்பனந்தாள், கும்பகோணம், பாபநாசம் ஆகிய முக்கிய இடங்கள் உள்ளன. இந்த பகுதிகள் வழியாக ஆறுகள் செல்லும் இடங்களில் மட்டும் 102 இடங்களிலும், சாலை பகுதிகளில் 70 இடங்களிலும் பாலங்கள் அமைக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
இதுதவிர 5 இடங்களில் ரயில்வே மேம்பாலங்களும், 2 இடங்களில் புறவழிச்சாலைகளும், 3 இடங்களில் சுங்கச்சாவடிகளும் அமைக்கப்படுகின்றன. இந்த சாலை பணிகளை 2020ம் ஆண்டு முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (நகாய்) ஒப்பந்தம் செய்தது. ஆனால் இந்த 4 வழிச்சாலை பணிகள் மிகவும் மந்தமாக ஆமை வேகத்திலேயே நடந்து வந்தது.
குறிப்பாக விக்கிரவாண்டி-சேத்தியாத்தோப்பு வரை மும்பையை சேர்ந்த ரிலையன்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் எடுத்த நிலையில் இயந்திரம், ஆட்கள் தட்டுப்பாடு உள்ளிட்ட ஒரு சில காரணங்களால் குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்காமல் விக்கிரவாண்டியில் இருந்து சேத்தியாத்தோப்பு பின்னலூர் வரை 4 வழிச்சாலை பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. பாலம் கட்டும் பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது.
இரு வழிக்காக அமைக்கப்பட்ட சாலையில் ஜல்லிகள் பெயர்ந்து காணப்படுகின்றன. ஆனால் சேத்தியாத்தோப்பு-சோழபுரம் வரை 51 கி.மீ. தூரத்துக்கும், சோழபுரத்தில் இருந்து தஞ்சாவூர் வரை 48 கி.மீ. தூரத்துக்கும் ஒப்பந்தம் எடுத்த மற்ற 2 நிறுவனங்களும் குறிப்பிட்ட காலத்துக்குள் பணிகளை முடித்தது. அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் ராமேஸ்வரத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடி சோழபுரம் - தஞ்சாவூர் சாலையை பயன்பாட்டிற்கு திறந்துவைத்தார்.
இந்நிலையில், தொடர்ந்து 2 நாட்கள் பயணமாக மீண்டும் தமிழகத்திற்கு வந்துள்ள பிரதமர் மோடி சேத்தியாத்தோப்பு-சோழபுரம் இடையே 51 கி.மீ தூரத்திற்கான சாலையை நேற்று திறந்து வைத்துள்ளார். ஆனால் விக்கிரவாண்டி - சேத்தியாத்தோப்பு இடையேயான சாலை 47 சதவீத பணிகளோடு கிடப்பில் போடப்பட்டுள்ளது. விக்கிரவாண்டி - தஞ்சாவூர் இடையேயான சாலை இன்னும் முழுமையாக முடிவடைந்து பயன்பாட்டிற்கு வராமல் உள்ள நிலையில் 2வது முறையாக இந்த சாலையை பிரதமர் இன்று திறந்து வைக்கவுள்ளார்.
சாலை பணிகளை முழுமையாக முடிக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் பொதுநலவழக்கும் தொடரப்பட்டு நிலுவையில் உள்ளது. கடந்த ஜனவரியில் ரூ.1000 கோடி நிதிஒதுக்கீடு செய்து பணிகள் தொடங்கும் என்று ஒன்றிய சாலை போக்குவரத்து அமைச்சர் தெரிவித்தும் பணிகள் தொடங்கவில்லை.
மொத்தமுள்ள 165 கி.மீ தூர சாலையை முடிக்க 10 ஆண்டுகளை கடந்தும் நிதிஒதுக்கீடு செய்தும் பணிகள் முடிக்கவில்லை. ஆனால் ஒன்றிய அரசு இந்த சாலையை 2வது முறையாக திறப்பு விழாவிற்கு பிரதமர் மோடியை அழைத்துள்ளது. டெல்டா மாவட்ட மக்களை ஏமாற்றும் வகையில் நடைபெறும் பிரதமரின் நிகழ்ச்சி மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
* இந்த பகுதிகள் வழியாக ஆறுகள் செல்லும் இடங்களில் மட்டும் 102 இடங்களிலும், சாலை பகுதிகளில் 70 இடங்களிலும் பாலங்கள் அமைக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
* இதுதவிர 5 இடங்களில் ரயில்வே மேம்பாலங்களும், 2 இடங்களில் புறவழிச்சாலைகளும், 3 இடங்களில் சுங்கச்சாவடிகளும் அமைக்கப்படுகின்றன.
* இந்த சாலை பணிகளை 2020ம் ஆண்டு முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (நகாய்) ஒப்பந்தம் செய்தது.
* ஆனால் இந்த 4 வழிச்சாலை பணிகள் மிகவும் மந்தமாக ஆமை வேகத்திலேயே நடந்து வந்தது.
* ரூ.6,431 கோடியில் பிரதமர் திறந்த சாலை டமால்
தமிழகத்தில் முக்கிய துறைமுகங்களை இணைக்கும் வகையில் ரூ.6,341 கோடியில் பிரதமர் மோடி திறந்துவைத்த சாலை சில மாதங்களிலேயே விரிசல் ஏற்பட்டு உடைந்துள்ளது. விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி, கடலூர் வழியாக நாகப்பட்டினம் இடையே 194 கிலோ மீட்டர் தூரத்துக்கு புதிதாக நான்கு வழி தேசிய நெடுஞ்சாலை ரூ.6,431 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டது.
முக்கிய துறைமுகங்கள் மட்டுமின்றி ஆன்மிக நகரங்கள், டெல்டா மாவட்டங்களை இணைக்கும் வகையில் இந்த சாலை அமைக்கப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் ராமேஸ்வரம் வந்தபோது இந்த சாலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். சில மாதங்களிலேயே விழுப்புரம் - புதுச்சேரி, கடலூர் இடையே பல இடங்களில் மேம்பாலங்களில் விரிசல் ஏற்பட்டு உடைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.