41 பேர் பலியான ஈரம் காய்வதற்குள் விஜய் வீடு, தவெக அலுவலகத்தில் ஆயுதபூஜை கொண்டாட்டம்: அலங்காரம் செய்யப்பட்ட பிரசார பஸ், வேன் படம் வைரல்; நெட்டிசன்கள் கடும் விமர்சனம்
சென்னை: கரூரில் தவெக தலைவர் விஜய் பிரசாரத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தார். அந்த கூட்டத்தில் போலீஸ் எதிர்ப்பையும் மீறி விஜய்யின் பிரசார பஸ்சை கொண்டு சென்றதே 41 பேர் பலிக்கு காரணம் என்று குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் நடந்தவுடன் விஜய், புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார், ஆதவ் அர்ஜூனா மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஆகியோர் எஸ்கேப் ஆகினர். மாவட்ட செயலாளர்கள் 2 பேர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார் ஆகியோர் தலைமறைவாகி உள்ளனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு விஜய் மற்றும் தவெக நிர்வாகிகள் யாரும் சென்று ஆறுதல் கூறவில்லை. ரூ.20 லட்சம் தர எண்ணுவதாக சொன்ன விஜய், இதுவரை பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கவில்லை. ஒரு கட்சி நிகழ்ச்சியில் பெரும் அசம்பாவிதம் நிகழ்ந்தால் கட்சி நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு, கட்சி கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்படும். ஆனால், 41 பேர் பலியாகி ஊரே கலங்கி போயிருக்கும் நிலையில் தவெகவின் அலுவலகமான பனையூரில் ஆயுத பூஜை கொண்டாடி இருப்பது, உயிரிழந்த குடும்பங்கள் மற்றும் பொதுமக்களை கடும் கோபத்துக்கு ஆளாகி உள்ளது.
ஆயுத பூஜையை முன்னிட்டு, பனையூரில் உள்ள தவெக அலுவலகம் தோரணங்களால் அலங்காரம் செய்யப்பட்டு, 41 பேர் பலிக்கு காரணமான விஜய் பிரசார பஸ் மற்றும் வேனுக்கு வாழை மரம் கட்டி மாலை அணிவித்து பூ, பழம், தேங்காய் மற்றும் உணவு பொருட்கள் படையலிட்டு விமரிசையாக கொண்டாடப்பட்டுள்ளது. அது போல் நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டிலும் அவருடைய கார்களுக்கு ஆயுத பூஜை கொண்டாட்டம் நடந்துள்ளது. விஜய்யை பார்க்க வந்த ஒரு காரணத்திற்காக 41 பேர் இறந்திருக்கும் நிலையில் அவர்கள் இறந்து சுவடு கூட இன்னும் மறையாத நிலையில், அதற்குள் ஆயுதபூஜை கொண்டாட்டமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
பொதுவாக வீடுகளில் நெருங்கிய சொந்தம் இறந்துவிட்டால் பண்டிகைகளை ஒரு ஆண்டிற்கு குறைந்தபட்சம் 3 மாதங்களுக்காவது கொண்டாட மாட்டோம். ஆனால் இங்கு 41 பேர் இறந்து அவர்களின் வீடுகளில் கல்லறையின் ஈரம் கூட காய்வதற்குள், தவெக கட்சி அலுவலகத்திலும், விஜய் வீட்டிலும் இப்படியொரு கொண்டாட்டம் தேவையா? என்று அலங்காரம் செய்யப்பட்ட விஜய்யின் பிரசார பஸ் படத்தை சமூகவலைதளங்களில் பகிர்ந்து நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். சென்னையில் விஜய் உள்ள நிலையில் ஆயுத பூஜை கொண்டாட்டம் அவருக்கு தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.