விஜய் பிரசாரத்தில் 41 பேர் பலியான வழக்கு; கரூரில் சிபிஐ விசாரணை துவக்கம்: ஆவணங்களை சிறப்பு குழு ஒப்படைத்தது
கரூர்: விஜய் பிரசாரத்தில் 41 பேர் பலியானது தொடர்பாக அமைக்கப்பட்ட சிபிஐ குழுவினர் நேற்றுமுன்தினம் இரவு கரூர் வந்து விசாரணையை துவங்கினர். அவர்களிடம் வழக்கு ஆவணங்களை சிறப்பு குழுவினர் ஒப்படைத்தனர். கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27ம்தேதி தவெக தலைவர் விஜய் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக கரூர் டவுன் போலீசார், தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், துணை பொது செயலாளர் நிர்மல்குமார், கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் ஆகியோர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
இதில் தலைமறைவாக இருந்த கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், இவருக்கு அடைக்கலம் கொடுத்த கரூர் மாநகர பொறுப்பாளர் பவுன்ராஜ் ஆகியோர் 29ம்தேதி கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார் தலைமறைவாக இருந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு, ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை அமைத்தது.
கரூர் வந்த ஒரு நபர் ஆணைய குழுவினர், கரூரில் 2நாள் தங்கியிருந்து சம்பவம் நடைபெற்ற இடம், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களை நேரில் சந்தித்து விசாரணை மேற்கொண்டு சென்னை சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக சென்னை நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் 15 பேர் கொண்ட குழுவினர் கடந்த 5ம்தேதி கரூர் வந்தனர். பயணியர் மாளிகையில் தங்கியிருந்து 3 பிரிவுகளாக பிரிந்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், கரூர் சம்பவம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் கடந்த 13ம்தேதி நடந்தபோது வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் இந்த விசாரணையை கண்காணிக்க ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் குழுவும் அமைக்கப்பட்டது. தமிழக அரசு அமைத்த அருணா ஜெகதீசன் ஆணையம், சென்னை உயர்நீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வு குழு ஆகியவை தங்களிடம் உள்ள வழக்கு விசாரணை விபரம், ஆவணங்கள், ஆதாரங்களை சிபிஐ வசம் ஒப்படைக்கவும் உத்தரவிடப்பட்டது.
இதன்காரணமாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை நிறுத்தியது. மேலும் வழக்கு ஆவணங்களை சிபிஐயிடம் ஒப்படைக்க தயார் நிலையில் இருந்தது. இதையடுத்து, தலைமறைவாக இருந்த தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார், தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் ஆர்ஜூனா ஆகியோர் வெளியில் தலை காட்ட ஆரம்பத்தினர்.
நெரிசலில் பலியானவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.20 லட்சம் வழங்கப்படும் என விஜய் அறிவித்தபடி நிவாரணம் வழங்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறவும் 17ம் தேதி (நேற்று) விஜய் கரூர் வருவதாக இருந்தது. இதற்கான அனுமதி கேட்டு தவெக சார்பில் டிஜிபி அலுவலகத்தில் மனுவும் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக விஜய்யின் வீட்டிற்கு சென்று புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா ஆகியோர் ஆலோசனை நடத்தினர். ஆனால், விஜய் நிகழ்ச்சிக்கு சிலர் மண்டபம் மற்றும் கல்லூரி கொடுக்க தயக்கம் காட்டியதால் விஜய்யின் கரூர் வருகை திடீரென ரத்து செய்யப்பட்டது.
இது பாதிக்கப்பட்டவர்களிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.இதனிடையே நீதிமன்ற காவல் முடிந்து கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மதியழகன், பவுன்ராஜ் ஆகியோருக்கு கடந்த 14ம்தேதி ஜாமீன் வழங்கப்பட்டது. திருச்சி சிறையில் இருந்து நேற்றுமுன்தினம் ஜாமீனில் வந்த தவெக நிர்வாகிகள் மதியழகன், பவுன்ராஜ் ஆகியோர் சென்னை சென்று விஜய்யை நேரில் சந்தித்தனர். சம்பவத்தின் போது நடந்த விவரங்களை அவர்களிடம் விஜய் கேட்டறிந்தார்.
இந்த சூழலில், உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிபிஐ குழு எப்போதும் கரூர் வரும், விசாரணையை துவக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இந்த நிலையில் குஜராத் கேடரை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி பிரவீன்குமார் தலைமையில் ஏடிஎஸ்பி முகேஷ்குமார், டிஎஸ்பி ராமகிருஷ்ணன் உட்பட 5 பேர் கொண்ட சிபிஐ குழுவினர் நேற்று அதிகாலை 1 மணியளவில் கரூர் வந்தனர். பின்னர் அவர்கள், கரூர் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பயணியர் விடுதியில் தங்கினர்.
சிறப்பு புலனாய்வு குழுவை சேர்ந்த ஏடிஎஸ்பி திருமால் நேற்று காலை 9 மணியளவில் பயணியர் விடுதிக்கு சென்று சிபிஐ குழுவை நேரில் சந்தித்தார். அப்போது இந்த வழக்கு தொடர்பாக ஒரு மணி நேரம் ஆலோசனை நடந்தது. கடந்த 9 நாட்களாக மேற்கொண்ட விசாரணை அறிக்கை மற்றும் ஆவணங்கள், வீடியோக்கள் ஆகியவற்றை சிபிஐ அதிகாரிகளிடம் ஏடிஎஸ்பி ஒப்படைத்தார்.
தொடர்ந்து பிற்பகல் 12 மணி முதல் 2 மணி வரை வனத்துறை, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் தனித்தனியாக பயணியர் விடுதிக்கு நேரில் வந்து சிபிஐ அதிகாரிகளை சந்தித்து சென்றனர். எஸ்ஐடி குழு அளித்துள்ள இந்த ஆவணங்களின் அடிப்படையில் சிபிஐ குழுவினர், முதல் கட்டமாக சம்பவம் நடந்த வேலுச்சாமிபுரத்துக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். 41 பேர் பலி தொடர்பான விசாரணைக்கு சிபிஐ அதிகாரிகள் கரூர் வந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
* கடைக்காரர்களை விசாரிக்க சிபிஐ திட்டம்
கரூர் டவுன் போலீசார் நேற்றுமுன்தினம் இரவு 9 மணியளவில் வேலுச்சாமிபுரத்துக்கு சென்று அங்குள்ள கடைக்காரர்களை சந்தித்து சிபிஐ குழு விசாரணைக்கு வர உள்ளது. எனவே, கடையை திறந்து வைத்திருங்கள் என்று கேட்டுக்கொண்டனர். ஆனால் 10.30 மணி வரை சிபிஐ குழுவினர் யாரும் வராததால் வியாபாரிகள் கடைகளை பூட்டி விட்டு சென்றனர். இதனால் வியாபாரிகளிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
* ஆவணங்கள் எரிப்பா? போலீஸ் விளக்கம்
கரூர் கூட்ட நெரிசல் சம்பவ வழக்கை விசாரணை நடத்துவதற்காக சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழு கரூரில் கடந்த 5ம்தேதி முதல் தங்கி விசாரணை நடத்தி வந்தது. உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் விசாரணை 13ம்தேதி சிபிஐ வசம் சென்றதால் கரூரில் தங்கி இருந்த சிறப்பு புலனாய்வு குழுவினர், கரூர் கலெக்டர் அலுவலகம் மற்றும் ஆயுதப்படை வளாகத்தில் செயல்பட்டு வந்த சிறப்பு புலனாய்வு குழு அலுவலகங்களை காலி செய்து அனைத்து தளவாட பொருட்களை வேனில் ஏற்றி அனுப்பி வைத்து விட்டு கரூரில் இருந்து புறப்பட்டு சென்றனர்.
* இந்நிலையில் எஸ்ஐடி குழு
தங்கியிருந்த அலுவலகத்தின் பின்புறம் சில இடங்களில் எரிந்த நிலையில் காகிதங்கள் கிடந்தது. அதன் அருகிலேயே 32 ஜிபி கொண்ட பென் டிரைவ் ஒன்றும் கிடந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக போலீசார் கூறியதாவது: சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தும் போதும், விசாரணையை முடிக்கும் போதும் வழக்கிற்கு தேவையில்லாத ஆவணங்களை தீயிட்டு எரித்து அழிப்பது வழக்கமான ஒன்று தான். அதே போல் தான் தமிழக அரசால் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழுவினர், வழக்கு தொடர்பான ஆவணங்களை சிபிஐ வசம் ஒப்படைத்த பிறகு, வழக்கிற்கு தேவையில்லாத காகிதங்கள் மற்றும் பென் டிரைவை எரித்துள்ளனர் என்றனர்.