விஜய் பிரசாரத்தில் 41 பேர் பலியான கரூரில் காரில் இருந்தபடி சிபிஐ அதிகாரிகள் ஆய்வு: யாரிடமும் விசாரணை நடத்தவில்லை
கரூர்: கரூர் வேலுச்சாமிபுரத்தில் விஜய் பிரசாரத்தின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சம்பவம் நடைபெற்ற இடத்தை சிபிஐ அதிகாரிகள் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். காரில் இருந்தபடியே பார்வையிட்டனர். யாரிடமும் விசாரணை நடத்தவில்லை. கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27ம்தேதி தவெக தலைவர் விஜய் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மேற்பார்வையில் சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் கடந்த 13ம் தேதி உத்தரவிட்டது.
அதன்படி முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி மேற்பார்வையில் குஜராத் கேடரை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி பிரவீன் குமார் தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. அந்த குழு எப்போது கரூர் வரும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில் சிபிஐ அதிகாரிகள் கடந்த 16ம்தேதி (வியாழக்கிழமை) நள்ளிரவில் கரூர் வந்தனர். அவர்களிடம் வழக்கு ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டது. அடுத்த நாளே (17ம்தேதி வெள்ளிக்கிழமை) சிபிஐ அதிகாரிகள் தங்களது விசாரணையை தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இன்னும் சிபிஐ அதிகாரிகள் தங்களது விசாரணையை தொடங்கவில்லை. நேற்று சிபிஐ அதிகாரிகளை வனத்துறை, வருவாய்துறை உள்ளிட்ட சில அதிகாரிகள் சந்தித்துவிட்டு சென்றதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இரண்டாவது நாளான நேற்று பிற்பகல் 2.25 மணிக்கு சிபிஐ அதிகாரிகள் பயணியர் மாளிகையில் இருந்து புறப்பட்டனர். பின்னர் மாலை 5.15 மணியளவில் வேலுச்சாமிபுரம் வந்த சிபிஐ அதிகாரிகள் காரில் இருந்து இறங்கவில்லை. சுமார் 5 நிமிடங்கள் காருக்குள் இருந்தவாறே அந்த இடத்தை பார்வையிட்ட பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச்சென்றனர். காரில் இருந்து இறங்கி யாரிடமும் விசாரிக்கவில்லை.