விஜயகாந்த் நடித்த கேப்டன் பிரபாகரன் படம் பார்த்தார் தியேட்டரில் கதறி அழுத பிரேமலதா
நெய்வேலி: கேப்டன் பிரபாகரன் ரீ-ரிலிசான நிலையில் நெய்வேலி தியேட்டரில் அப்படத்தின் முதல்காட்சியை பார்த்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கதறி அழுதார். மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு அவரது திரைப்பயணத்தின் மைல்கல் திரைப்படமான ‘கேப்டன் பிரபாகரன்’ புதுப்பொலிவுடன் வெள்ளித் திரைக்கு மீண்டும் வந்துள்ளது.
இந்த படம் வெளியாகி 34 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் 500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இப்படத்தின் முதல் காட்சியை நெய்வேலி மெயின் பஜாரில் உள்ள பிரபல திரையரங்கில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், அவரது மகன் விஜய பிரபாகரன் மற்றும் எல்.கே.சுதீஷ் ஆகியோர் ரசிகர்களுடன் அமர்ந்து நேற்று பார்த்தனர்.
முன்னதாக பேண்ட் வாத்தியங்கள் முழங்க திரையரங்கிற்குள் மூவரும் அழைத்து வரப்பட்ட நிலையில் படத்தை கைதட்டி ரசித்து பார்த்தனர். அப்போது சண்டைக் காட்சியில் விஜயகாந்த் முதன்முறையாக தோன்றியபோது பிரேமலதா கதறி அழத் துவங்கினார். அவருக்கு கண்ணீருடன் விஜய பிரபாகரன், சுதீஷ் இருவரும் ஆறுதல் கூறினர்.
பின்னர் படம் முடிந்து வெளியே வந்த பிரேமலதா கூறுகையில், கேப்டன் பிரபாகரன் படத்தில் மாவீரன்போல் கேப்டன் நடித்துள்ளார். மாவீரனுக்கு மனைவியாக வாழ்ந்ததில் பெருமிதப்படுகிறேன். தங்கள் வாழ்வாதாரத்துக்காக போராட்டம் நடத்தி ஒப்பந்த தொழிலாளர்களை என்எல்சி நிர்வாகத்தினர் பணியிடை நீக்கம் செய்துள்ளனர். உடனடியாக அவர்களை பணியமர்த்த வேண்டும் என்றார்.