விஜய்யுடன் சேருவது டிடிவிக்குதான் கேவலம்: நடிகர் சரத்குமார் நச்
அவனியாபுரம்: பாஜ தேசிய பொதுக்குழு உறுப்பினரும், நடிகருமான சரத்குமார் மதுரை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: நடிகை கவுரி கிஷனிடம் எடை குறித்து கேள்வி கேட்டது தவறு. திரைப்பட விழாவில் படம் மற்றும் அதில் அவரது கேரக்டர் பற்றி மட்டுமே பேச வேண்டும். விழாவில் உடன் இருந்த நடிகர், இயக்குனர் இதனை கண்டித்திருக்க வேண்டும். ஒரு ஆணுக்கு அதுவே அழகு. அவர்கள் அதனை செய்யாதது வருத்தம் அளிக்கிறது. 2026 தேர்தலில் திமுகவிற்கும், தவெகவிற்கும் தான் போட்டி என்று விஜய் கூறுவது அவரது கருத்து. அதை அழுத்தமாக சொல்வது குறித்து, அவரைத்தான் கேட்க வேண்டும். அதிமுகவை பிடிக்காத காரணத்தால், டிடிவி.தினகரனும் இதேபோல் கூறி இருக்கிறார்.
அவர் ஒரு இயக்கத்தை உருவாக்கி சிறப்பாக நடத்த வேண்டும் என்ற எண்ணத்தோடு இருக்கும்போது, இன்றைக்கு வந்த கட்சியோடு சேர்வோம் என்று கூறுவது அவர்களுக்கு தான் கேவலம். இவ்வாறு அவர் கூறினார். பாஜவுடன் கூட்டணியில் இருக்கும் அதிமுகவில் இருந்து, முக்கிய தலைவர்கள் தொடர்ந்து வெளியேறி வருவது குறித்து கேட்டபோது, ‘‘நாளை என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது. பொறுத்திருந்து பார்க்க வேண்டிய இந்த பிரச்னையில், நான் உடனே பதில் சொல்லும் நிலையில் இல்லை. 2026 ேதர்தலில் நான் போட்டியிடுவது குறித்து அப்போது தெரிவிப்பேன். கோவை மாணவி பாலியல் வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும்’’ என்றார்.