விஜய் கூட்ட நெரிசலில் 41 பேர் பலி தவெக நிர்வாகிகளிடம் 8 மணி நேரம் விசாரணை
கரூர்: கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி விஜய் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த வழக்கை ஐபிஎஸ் அதிகாரி பிரவீன்குமார் தலைமையில் 12 சிபிஐ அதிகாரிகள் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் கடந்த 3ம்தேதி சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்துக்கு சிபிஐ அதிகாரிகள் நேரில் சென்று கரூரில் விஜய் பிரசார வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகள், தவெக சார்பில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்ட வீடியோ காட்சி பதிவுகளை ஒப்படைக்கும்படி சம்மன் அளித்தனர்.
இதையடுத்து சென்னை பனையூர் தவெக கட்சி அலுவலக உதவியாளர் குரு, தவெக வழக்கறிஞர் அரசு மற்றும் திருச்சி மண்டல இணை செயலாளர் குருசரண் ஆகிய 3 பேர் நேற்றுமுன்தினம் கரூர் சிபிஐ விசாரணை அலுவலகத்தில் ஆஜராகினர். சம்பவம் தொடர்பான ஆவணங்கள், விஜய்யின் பிரசார பஸ்சின் சிசிடிவி பதிவு காட்சிகளை ஒப்படைத்தனர். இந்நிலையில் மீண்டும் 3 பேரும் நேற்று காலை 11 மணியளவில் சிபிஐ அதிகாரிகள் முன்னிலையில் ஆஜராகினர். இரவு 7 மணி வரை அவர்களிடம் விசாரணை நடந்தது.
நேற்றுமுன்தினம் சிபிஜ விசாரணை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்ட முக்கிய ஆவணங்கள், சிசிடிவி பதிவு காட்சிகள் உள்ளிட்டவை குறித்து விரிவாக கேட்கப்பட்டது. மேலும் கரூர் சம்பவத்துக்கு மிகவும் தொடர்புடையதாக கருதப்படும் கரூரை சேர்ந்த ராம்குமார் குறித்தும், அவரிடம் ஏதேனும் சிசிடிவி பதிவுகள் மற்றும் ஆவணங்கள் உள்ளனவா, அவர் எங்கு உள்ளார் என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதோடு நேற்று கரூர் மற்றும் வேலாயுதம்பாளையத்தை சேர்ந்த 2 ஆம்புலன்ஸ் டிரைவர்களும் வரவழைக்கப்பட்டு அவர்களிடம் 2 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தப்பட்டது.