விஜய் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம் 3 எஸ்ஐக்களிடம் 4 மணி நேரம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை
கரூர்: கரூரில் கடந்த மாதம் 27ம்தேதி தவெக தலைவர் விஜய் பிரசாரத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. சம்பவத்தன்று வேலுச்சாமிபுரத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த 12 காவலர்கள், 10 சப்-இன்ஸ்பெக்டர்கள் என 22 பேருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியிருந்த நிலையில் நேற்றுமுன்தினம் 8 பெண் உட்பட 12 காவலர்கள், 7 சப்-இன்ஸ்பெக்டர்கள் சிபிஐ அதிகாரிகள் முன்னிலையில் தனித்தனியாக ஆஜராகி விளக்கமளித்தனர். மாலை 6.30 மணிக்கு மேல் ஆஜராக வந்த ஒரு பெண் சப்-இன்ஸ்பெக்டர், 2 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களிடம் விசாரிக்க போதிய நேரம் இல்லாததால் அவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரிக்க முடிய வில்லை.
இந்த நிலையில் நேற்று காலை 10 மணியளவில் சிபிஐ அதிகாரிகள் முன்னிலையில் தனித்தனியாக ஆஜரான பெண் எஸ்ஐ, 2 எஸ்எஸ்ஐ ஆகியோரிடம் 4 மணி நேரம் விசாரணை நடந்தது. இதில் பல்வேறு கேள்விகளை கேட்டு விளக்கம் பெற்று கொண்ட சிபிஐ அதிகாரிகள், அதை வாக்குமூலமாகவும் பதிவு செய்தனர்.