அலமேலு ஆட்டை பார்க்கவும் கூடுனாங்க... ஆட்டக்காரன் வீதிக்கு வந்தாலும் கூடுறாங்க... விஜய் மீது சீமான் அட்டாக்
சிவகாசி: விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் நாம் தமிழர் கட்சி சார்பாக பெருந்தலைவர் காமராஜர் புகழ் போற்றும் பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது: தற்போது அரசியலில் உள்ளவர்கள் எல்லோரும் புரட்டி புரட்டி படிக்க வேண்டிய அகராதியாக விளங்கியவர் பெருந்தலைவர் காமராஜர். அதிகாரத்திற்கு வரும் முன்பே எனக்கு இசட் ப்ளஸ் பாதுகாப்பு வேண்டும் என்கிறார்கள். தமிழகத்தில் முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் என எல்லோருக்கும் உயர் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு இல்லாமல் சுற்றிக்கொண்டு இருப்பது நான் மட்டுமே. ஏனென்றால் நாங்கள் தான் நாட்டிற்கே பாதுகாப்பு.
நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் இதுவரை விரும்பத்தகாத, சட்டத்திற்கு கேடான நிகழ்வு நடந்ததில்லை. ஏனென்றால் இது காவாலி கூட்டம் அல்ல, கருத்தியல் கூட்டம். மக்கள் முட்டாள்கள் கிடையாது, மக்கள் மக்காக இருந்தால் எனக்கு 36 லட்சம் வாக்கு செலுத்தி 3வது கட்சியாக ஆக்கி இருக்க மாட்டார்கள். ஓட்டுப்பெட்டி (இயந்திரங்கள்) இருக்கும் வரை வாக்குகளை ஏமாற்ற முடியும் என்பது மோடிக்கும் தெரியும். ராகுல் காந்திக்கும் தெரியும், நாட்டு மக்களுக்கும் தெரியும். இந்தியாவிற்கு இந்த வாக்கு பெட்டிகளை தயாரித்துக் கொடுக்கும் ஜப்பான் நாட்டில் வாக்கு சீட்டு முறையே நடைமுறையில் உள்ளது.
படிக்காதவன் எப்படி தனக்கான நல்ல தலைவரை தேர்வு செய்வான். இப்படித்தான் கூட்டத்தில் கூடி சிக்கி சாவான். இப்பல்லாம் ரொம்ப கொலை வெறி ஏற்பட்டால், நாம ஏன் இவனை கொன்று ஜெயிலுக்கு போக வேண்டும் என நினைக்கிறார்கள். கூட்டத்தில் நசுங்கி செத்துட்டு வா என சொல்லும் நிலை உள்ளது. அழகர் ஆற்றில் இறங்கினாலும் கூடுறாங்க. ஆட்டக்காரன் வீதிக்கு வந்தாலும் கூடுறாங்க. நான் சின்ன பிள்ளையாக இருந்தபோது, ஆட்டுக்கார அலமேலு படத்தில் நடித்த ஆடு வருவதாக கூறியதால் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடினார்கள். அவ்வளவு அறிவார்ந்த சமூகமாக இது போய்க் கொண்டுள்ளது. ஒரு தலைவன் சரியாக இருந்தால் எல்லாம் சரியாக இருக்கும் என்பதற்கு சான்று காமராஜர். இவ்வாறு தெரிவித்தார்.