10 ஆயிரம் பேர் கலந்து கொள்வதாக எதிர்பார்ப்பு; புதுச்சேரியில் வரும் 5ம் தேதி விஜய் ரோடு ஷோ: காவல்துறையிடம் அனுமதி கேட்டு நிர்வாகிகள் மனு
புதுச்சேரி: தவெக தலைவர் விஜய் 2026 சட்டமன்ற பொதுத்தேர்தலை கருத்தில் கொண்டு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். கடந்த செப்டம்பரில் கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். இதுதொடர்பாக தவெக பொதுச்செயலாளர் புதுச்சேரியை சேர்ந்த புஸ்சி ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது. அதன்பிறகு விஜய் நடத்த திட்டமிட்டிருந்த அனைத்து சுற்றுப்பயணங்களும் தள்ளி வைக்கப்பட்டன. புதுச்சேரியில் ரோடு ஷோவுக்கு முடிவு செய்திருந்த நிலையில், அரசியல் கட்சிகளின் கடுமையான எதிர்ப்பு காரணமாக அங்கும் தனது பயணத் திட்டத்தை விஜய் உடனே ரத்து செய்தார்.
இதற்கிடையே நீண்ட நாட்களுக்குபின் காஞ்சிபுரத்தில் கடந்த வாரம் 2 ஆயிரம் பேரை தனியாக மண்டபத்தில் கூட்டி சந்தித்து பேசினார். அப்போது மக்கள் நலத்திட்டங்கள் குறித்த சில அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். இந்நிலையில், புதுச்சேரியில் தவெக தலைவர் விஜய் ரோடு ஷோ நிகழ்ச்சியை வரும் 5ம் தேதி நடத்த அக்கட்சியினர் முடிவு செய்து, அதற்காக காவல்துறை தலைமையிடம் அனுமதி கேட்டுள்ளனர். அக்கட்சியின் மாநில நிர்வாகி புதியவன் தலைமையில் 15க்கும் மேற்பட்டோர் இன்று காலை புதுச்சேரி காவல்துறை தலைமையகத்தில் டிஜிபி செயலரிடம் மனு அளித்துள்ளனர்.
அதில், தவெ கழக தலைவர் விஜய் வரும் 5ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை புதுச்சேரி எல்லையான காலாப்பட்டில் தொடங்கி அஜந்தா சிக்னல், உப்பளம் வாட்டர் டேங்க், மரப்பாலம், அரியாங்குப்பம், தவளக்குப்பம், கிருமாம்பாக்கம், கன்னியக்கோவில் வரை சாலை மார்க்கமாக வந்து மக்களை சந்திக்க உள்ளார். உப்பளம் சோனாம்பாளையம் வாட்டர் டேங்க் அருகே ஒலிபெருக்கி மூலமாக மக்கள் மத்தியில் உரையாற்ற உள்ளார். எனவே தேவையான பாதுகாப்பை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்’ என கூறப்பட்டுள்ளது.