முதல்வர் இரவு 1 மணிக்கே இங்கு வருகிறார் இவ்வளவு பிரச்சனைக்கு காரணமான விஜய் மூஞ்சியை திருப்பிவிட்டு செல்கிறார்: பொதுமக்கள் குற்றச்சாட்டு
சென்னை: முதல்வர் நேற்று இரவு 1 மணிக்கே இங்கு வருகிறார், இவ்வளவு பிரச்சனைக்கு காரணமானவர் மூஞ்சியை திருப்பி விட்டு செல்கிறார், இவர் கட்சியை களைத்து விட்டு செல்ல வேண்டும் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கரூர் பொதுமக்கள் நிருபர்களிடம் கூறியதாவது: தவெக தலைவர் விஜய் 50 பேரை கரூருக்கு வந்து பிணமாக்கி விட்டு சென்றுவிட்டார். இரவே வெளிநாட்டிற்கு கிளம்பி போய்விடுவார், விஜய் நீதிமன்றத்திற்கு வந்து பதில் சொல்லியாக வேண்டும். உயிரிழப்புக்கு காரணம் விஜய் தான், 2 மணிக்கு வருவதாக கூறினார்கள், ஆனால் இரவு 7 மணிக்கு வருகிறார்.
மதியத்தில் இருந்து சாப்பிடாமல் கூட இருந்தார்கள், ரோடு ஷோ நடத்தக்கூடாது என்று கூறினார்கள், விளம்பர அரசியல் செய்வதற்காக கும்பலை சேர்த்து பயங்கரமாக பண்ணியிருக்கிறார்கள், மக்கள் ஓட்டு அரசியலுக்காக வரவில்லை, நடிகர் வருகிறார் என்று பார்ப்பதற்காக தான் வந்தார்கள், இவ்வளவு உயிர் போனதற்கு இவர் மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும். முதல்வர் நேற்று இரவு 1 மணிக்கே இங்கு வருகிறார், இவ்வளவு பிரச்சனைக்கு காரணமானவர் மூஞ்சியை திருப்பிவிட்டு செல்கிறார். திருச்சியில் தங்கியிருந்து இன்று காலை வந்து மக்களை சந்தித்து இருக்கலாம். 6 பிஞ்சு குழந்தைகள் இறந்து இருக்கிறார்கள், இரங்கல் தெரிவிக்காமல் கூட சென்றுள்ளார் இது கண்டனத்துக்குரியது. விஜய் ஆபத்தான அரசியல் செய்கிறார். இவ்வாறு பொதுமக்கள் கூறினர்.
* கூட்டத்தைக் கூட்ட தாமதமாக வந்தாரா?
நடிகர் விஜய், காலை 8.45 மணிக்கு நாமக்கல்லில் பிரச்சாரம் செய்வதாக இருந்தது. 12 மணிக்கு கரூரில் பிரச்சாரம் முடிக்க வேண்டும். ஆனால் கரூருக்கு அவர் மாலை 6 மணிக்கு மேல்தான் வந்தார். இதனால், காவல்துறை கொடுத்த நேரமான 12 மணிக்கு போனால் கூட்டம் வராது, கரூரில் தொழிலாளர்களுக்கு இன்று சம்பளநாள், டெக்ஸ் டைல்சுக்கு வேலைக்கு போனவங்க 5 மணிக்கு மேலதான் வருவாங்க. இதனால், 6 மணிக்கு மேல போனா சரியாயிருக்கும்னு பிளான் போட்டுத்தான் தாமதமாக வந்ததாக கூறப்படுகிறது. ஏனென்றால் சம்பவம் நடந்த இடத்தில் பகல் 3 மணிக்கு ஒரு ட்ரோன் ஷாட் வெளியாகியுள்ளது. அதில் கூட்டம் குறைவாகவே இருந்தது தெரியவந்தது. இதனால் திட்டமிட்டே தாமதப்படுத்தியதே கூட்ட நெரிசலுக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.
* 2 அமைச்சர்கள் ஏடிஜிபி கரூர் விரைந்தனர்
கரூரில் நடந்த விஜய் பிரசாரத்தில் நெரிசலில் சிக்கி 33 பேர் பலியாகினர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த செய்தியை அறிந்ததும், உடனடியாக முதல்வர் மு.க.ஸ்டாலின், கரூர் மாவட்ட கலெக்டரிடம் நேரடியாக தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு அனைவரையும் மருத்துவமனையில் அனுமதித்து விரைந்து தீவிர சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோரை உடனடியாக நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதற்காக பணிகளையும் அவர்களுக்கு தேவையான உதவிகளையும் போர்க்கால அடிப்படையில் செய்து தரும்படி உத்தரவிட்டுள்ளார். மீட்பு பணிகளை மேற்கொள்வதற்காக சட்டம் -ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதத்திற்கு உத்தரவிட்டார். இதனால் அவரும் சென்னையில் இருந்து உடனடியாக கரூர் விரைந்தார்.
* நாமக்கல்லிலும் 20 பேர் மயக்கம்
நாமக்கல்லில் நேற்று காலை 8.45 மணிக்கு விஜய் பிரசாரம் செய்வார் என அவரது கட்சியினர் அறிவித்திருந்தனர். அதனை நம்பி காலையிலேயே கட்சியினர் பிரசாரம் நடைபெற்ற சேலம் ரோட்டுக்கு வந்தனர். கையில் கொடியுடன் வந்த அவர்கள், சாலையின் குறுக்கே ஆங்காங்கே ஓடினர். மேலும், அருகில் உள்ள உயரமான கட்டிடங்களில் ஏறி உட்கார்ந்து கொண்டிருந்தனர். போலீசார் அவர்களை எச்சரித்தும் கேட்கவில்லை. கொளுத்தும் வெயியில் காத்திருந்தவர்கள் நேரம் செல்ல செல்ல மயங்கி சரிந்தனர். இதனால், பிரசாரம் நடைபெற்ற இடத்திற்கு தொடர்ந்து ஆம்புலன்ஸ் வாகனங்கள் வந்து கொண்டே இருந்தது. ஒருவழியாக மதியம் 2.45 மணியளவில் விஜய் பிரசாரம் நடைபெற்ற இடத்திற்கு வந்தார். விஜய் மிகுந்த தாமதமாக வந்ததால், ஏராளமானோர் மயங்கி விழுந்தனர். இதையடுத்து, ஆம்புலன்ஸ் வாகனத்தில் அவர்களை ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மயங்கி விழுந்த 20 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில், 3 பேருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
* மருத்துவமனையில் கண்ணீர் கடல்
கரூர் அரசு மருத்துவமனைக்கு குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என பலரையும் விஜய் பிரசார கூட்டத்திலிருந்து ஆம்புலன்ஸ்களில் தூக்கி வந்தனர். இவர்களில் 33 பேர் உயிரிழந்த நிலையிலேயே மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர். இதனால் அவர்களுடன் வந்தவர்கள், தகவலறிந்து வந்த பெற்றோர், உறவினர்கள் ஆகியோரின் மரண ஓலம் மருத்துவமனையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. ஐயோ என் மகன் போயிட்டானே, மகள் இறந்து விட்டாளே, குழந்தை போச்சே என்று பலரும் கதறி அழுவது நெஞ்சை உலுக்குவதாக இருந்தது. இன்னும் பலர் தங்களது உறவினர்களை தேடி கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
* ஓயாமல் ஒலித்த ஆம்புலன்ஸ்களின் சைரன் சத்தம்
நாமக்கலில் விஜய்யை காண்பதற்காக காலை 7 மணியில் இருந்தே திரண்ட கூட்டத்தினர், அவர் 8.45க்கு பதிலாக 2.45க்கு வந்ததால் சுமார் 8 மணிநேரம் கொளுத்தும் வெயிலில் காத்திருந்தவர்கள் குடிநீர் கூட கிடைக்காமல் மயங்கி விழத்தொடங்கினர். இதனால் கூட்டத்திற்குள் ஆம்புலன்ஸ்கள் வந்து அவர்களை மருத்துவமனைக்கு ஏற்றிச் செல்வது அடுத்தடுத்து நடந்தது. அதேபோல கரூருக்கு நண்பகல் 12 மணிக்கு வரவேண்டிய விஜய் மாலை 7.30 மணிக்கே வந்து சேர்ந்தார். இதனால் அங்கும் மயங்கி விழுந்தவர்களை மருத்துவமனைக்கு தூக்கி செல்ல ஆம்புலன்ஸ்கள் வந்தவண்ணம் இருந்தது. இதனால் ரசிகர்கள், தொண்டர்கள் கூட்டத்திற்குள் ஆம்புலன்ஸ்களின் சைரன் ஓயாமல் ஒலித்துக்கொண்டே இருந்தது.
* போலீசாரை பாராட்டிய விஜய்
தவெக நிர்வாகிகள், காவல்துறையினரின் அறிவுறுத்தல்களை எதுவுமே கேட்கவில்லை. விஜய்க்கு பேச அனுமதி அளிக்கப்பட்ட நேரம் பிற்பகல் 12 மணி. ஆனால் விஜய் வந்து சேர்ந்து பேசும் போது நேரம் இரவு 7.30 மணி. விஜய்யும் தனது பேச்சின் தொடக்கத்தில், நான் இங்கு வந்து சேர்ந்ததற்கு காவல்துறையினர்தான் காரணம். அதற்காக நான் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். அவர்கள் இல்லை என்றால் நான் இந்த இடத்திற்கு வந்திருக்க முடியாது என்று காவல்துறையை பாராட்டி விட்டுதான் தனது பேச்சை தொடங்கினார். எனவே காவல்துறையினர் தங்களது பாதுகாப்பு பணியில் சரியாக நடந்து கொண்டுள்ளனர் என்பது இதில் இருந்து தெரிகிறது. காவல்துறையினரின் அறிவுறுத்தலை தவெக நிர்வாகிகள் உள்ளிட்ட யாரும் செவிசாய்க்காததே இந்த சம்பவத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
* கரூரில் இன்று முழு அடைப்பு
கரூரில் 38 பேர் பலியான சம்பவத்தைக் கண்டித்தும், உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்தும், கரூர் நகர் முழுவதும் இன்று ஒரு நாள் முழு அடைப்பு நடைபெறும் என்று வியாபாரிகள் அறிவித்துள்ளனர்.
பலியானவர்கள்
14 ஆண்கள்
16 பெண்கள்
8 குழந்தைகள்
* 10 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி வாங்கிய தவெகவினர்
கரூர் மாவட்டம், கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தவெக மேற்கு மாவட்டம் சார்பில் அளித்த மனுவில், எங்கள் கழகத் தலைவர் விஜய் சாலை மார்க்கமாக கரூர்க்கு வருகை புரிந்து மக்களை சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பின் போது ப்ளக்ஸ் பேனர்கள் மற்றும் கரூர் மாவட்டப் பகுதிகளில் கட்சிக் கொடிகள் அமைத்து ஒலி, ஒளி அமைத்து பேசவுள்ளார். மேற்படி லைட் ஹவுஸ் ரவுண்டானா இடத்தை கடந்த 23ம் தேதி பொறியாளரை வைத்து அளவீடு செய்ததில் 1,20,000 சதுரடி காலியிடமாக உள்ளது. இதில் 60 ஆயிரம் நபர்கள் வரை நின்று பார்வையிட வாய்ப்புள்ளது. நாங்கள் இக்கூட்டத்திற்கு எதிர் பார்க்கப்படும் நபர்கள் 10,000 பேர்வரை ஆகும். பொறியாளர் அளந்து கொடுத்த சான்று மற்றும் வரைபடம் இணைக்கப் பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு தேவையான பாதுகாப்பை வழங்கி எங்கள் கழகத் தலைவரின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதி மற்றும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
* தவெக நிர்வாகிகளால் பறிபோன உயிர்கள்
கரூர் வேலுசாமிபுரத்துக்கு இரவு 7 மணிக்கு விஜய் வந்தார். கூட்டத்தை கட்டுப்படுத்தி, முறைப்படுத்த வேண்டிய அடுத்த கட்ட தலைவர்களான புஸ்சி ஆனந்த் காரை விட்டு இறங்கவே இல்லை. இதே போல, ஆதவ் அர்ஜூனா வாகனத்தில் அமர்ந்திருந்தாரே தவிர, வேனிற்கு மேலே வந்து மைக்கை பிடித்து கூட்டத்தை கட்டுப்படுத்த முன்வரவே இல்லை. நிலைமை கட்டுக்கடங்காமல் போவதை உணர்ந்த காவல்துறையினர் தலையிட்டு கூட்டத்தை விலக்கி விஜய் வாகனத்தை பிரசார இடத்திற்கு வந்து சேர வழி வகை செய்தனர். ஆனால் அதற்குள் கட்டுப்பாடற்ற கூட்டத்தின் நெரிசல் காரணமாக, மூச்சு திணறல் ஏற்பட்டு கூட்டத்தில் இருந்து தப்பிப்பதற்காக, டிரான்ஸ்பார்மர்கள், தடுப்புக்காக வைக்கப்பட்டிருந்த இரும்பு தகரங்களை உடைத்துக்கொண்டு கூட்டத்தினர் வெளியேறினர். மற்றொருபுறம் அருகில் உள்ள கடைக்குள் புகுந்து மேலே உள்ள கீற்று கொட்டகையை உடைத்துக்கொண்டு வெளியேறினர். விஜய் பேசிகொண்டிருந்த போதே நெரிசல் தாங்காமல் பலர் மயங்கி விழுந்தனர். உடனே, பேச்சை நிறுத்தி வாட்டர் பாட்டில்கள் கேட்டு விஜய் பஸ்சில் இருந்தபடியே தூக்கி வீசினார். தன்னை சுற்றி கூட்டத்தில் நடப்பதை விஜய் கவனித்து இருந்தால் கூட்டத்தை கட்டுப்படுத்தி இவ்வளவு பெரிய அசம்பாவிதத்தை தவிர்த்து இருக்கலாம்.
* கதறும் நரகமாக மாறிய கரூர்
கரூர் வேலுச்சாமிபுரத்தில் விஜய் பேச்சை ஆரம்பித்த உடனேயே ஆம்புலன்ஸ் எழுப்பிய சைரன் ஓசை அவரின் பேச்சை நிறுத்தியது. அப்போதே தொடங்கி விட்டது மரண ஓலம். விஜய் பேசிக்கொண்டிருந்த போதே முண்டியடித்த கூட்டத்தில் இருந்து குழந்தைகளும், பெண்களும் மூச்சு திணறலால் கூக்குரலிட்டு கதறின. விஜய்யின் பேச்சு சத்தத்தோடு, அந்த குரல்களின் அழுகை சத்தம் அதிகமாகவே கேட்டது. விஜய் பேசிக்கொண்டிருந்த போதே முதலில் 3 ஆம்புலன்ஸ்கள் கூட்டத்திற்குள் இருந்து புறப்பட்டது. தொடர்ந்து மீண்டும் இரண்டு ஆம்புலன்ஸ்கள் மயங்கிய நிலையில் இருந்தவர்களை மீட்டு கொண்டு சென்றது.
வேலுசாமிபுரத்தில் இருந்து சைரன் ஒலியை எழுப்பிய வண்ணம் 10க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் தொடர்ந்து போய்கொண்டே இருந்தன. கரூர் மாநகரத்தில் மருத்துவமனைகளை தேடி நான்கு திசைகளிலும் ஆம்புலன்ஸ்கள் புயல் வேகத்தில் சென்றதால், நேற்றிரவு கரூர் மாநகரம் முழுவதும் ஆம்புலன்ஸ் சத்தத்தால் அலர்ந்தது. நேரம் செல்ல செல்ல கரூரின் நான்கு திசைகளிலும் இருந்து பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இருசக்கர வாகனங்கள், ஆட்டோ, காரில் ஏறி கதறி துடித்தபடி அரசு மருத்துவமனை நோக்கி சென்றதால், கரூர் சாலை எங்கும் அழுகுரல் கேட்டது. மேலும் பதறியடித்து ஓடி வந்த உறவினர்கள், நண்பர்கள் ஒட்டுமொத்தமாக அரசு மருத்துவமனையில் திரண்டதால் எங்கும் அழுகுரல் கேட்டது. உயிருக்கு போராடி கொண்டிருந்தவர்கள் மூச்சு திணறலால் துடிதுடித்து கதறி கொண்டிருந்ததால், கரூர் மருத்துவமனை எங்கும் மரண ஓலத்தால் அலறியது. மொத்தத்தில் நேற்று இரவு கரூர் மாநகரம் கதறும் நரகமாக மாறியது.
* தலைமைச் செயலகத்தில் ஸ்டாலின்
இரவோடு இரவாக கரூர் விரைந்தார்
கரூரில் உயிரிழப்பு சம்பவம் கேள்விப்பட்டவுடன், அந்த மாவட்ட கலெக்டருடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியம், அன்பில் மகேஷ் ஆகியோரை சம்பவ இடத்துக்கு விரைய உத்தரவிட்டார். முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியுடன் பேசி அவரையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். உயிரிழப்புகள் அதிகரிக்கத் தொடங்கியவுடன் தலைமைச் செயலகத்துக்கு விரைந்து வந்தார். தலைமைச் செயலாளர் முருகானந்தம், டிஜிபி வெங்கட்ராமன் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். அதைத் தொடர்ந்து, அதிகாலையில் கரூர் செல்ல முதல்வர் திட்டமிட்டிருந்தார். ஆனால், திடீரென்று தனது பயணத்தை மாற்றி விட்டு நள்ளிரவிலேயே அவர் தனி விமானத்தில் திருச்சி சென்றார். அங்கிருந்து கார் மூலம் கரூர் விரைந்தார். டாக்டர்களிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். காயமடைந்தவர்களை பார்த்து ஆறுதல் கூறினார். இறந்தவர்களின் உறவினர்களையும் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
* இதயம் நொறுங்கி போய் இருக்கிறேன்; 4 மணி நேரத்துக்கு பின் விஜய் இரங்கல்
விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதவில், ‘‘இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்; தாங்க முடியாத, வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையிலும் துயரத்திலும் உழன்று கொண்டிருக்கிறேன். கரூரில் உயிரிழந்த எனதருமை சகோதர, சகோதரிகளின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர், விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன்’’ என்று கூறியுள்ளார். 36 பேர் பலியான செய்து அறிந்தும், திருச்சி மற்றும் சென்னை விமான நிலையத்தில் பதிலளிக்காமல் சென்ற விஜய், 4 மணி நேரத்துக்கு பின் இரங்கல் தெரிவித்து உள்ளார்.
* ஏற்கனவே நீதிமன்றம் கண்டிப்பு
நடிகர் விஜய் பிரச்சாரம் செல்லும்போது ரசிகர்கள் வன்முறையில் ஈடுபடுவது, சாலைகளில் போக்குவரத்தை முடக்குவது போன்ற செயல்களில் இறங்கினர். மேலும் ஒரு கூட்டத்தில் இருந்து மற்றொரு கூட்டத்துக்கு செல்லும்போது ரசிகர்களும் கார்கள், இரு சக்கர வாகனங்களில் பின் தொடர்ந்து சென்று வந்தனர். இதனால் பல இடங்களில் விபத்துகளும் ஏற்பட்டன. நேற்றும் இதுபோல விபத்துகள் ஏற்பட்டன. இதனால் போலீசார் பொதுக்கூட்டங்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்தனர். இந்த கட்டுப்பாடுகளை எதிர்த்து, தவெக சார்பில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டன. இதனால் நீதிமன்றத்தில் நீதிபதி பேசும்போது, ‘முழுமையாக போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டால் மக்கள் சிரமத்திற்கு ஆளாக மாட்டார்களா? யாரும் சட்டத்திற்கு மேலானவர்கள் அல்ல. பொதுக்கூட்டம் நடத்தினாலும் சட்டத்திற்கு உட்பட்டு தான் நடத்த வேண்டும். தலைவராக இருக்கும் நீங்கள் தான் கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். கர்ப்பிணிகள், மாற்றுத் திறனாளிகள் வர வேண்டாம் என்று கூறி பிற கட்சிகளுக்கு நீங்கள் முன்மாதிரியாக திகழலாமே என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். அதைத் தொடர்ந்தே கர்ப்பிணிகள், பெண்கள் வரவேண்டாம் என்று விஜய் அறிவித்தார்.