தவெக தலைவர் விஜய்யின் பேச்சு ஏற்புடையதல்ல: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
சேலம்: சேலத்தில் உள்ள தனியார் ஓட்டலில், நேற்றிரவு நடந்த திருமண நிகழ்ச்சியில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு, மணமக்களை வாழ்த்தினார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதிமுகவில் பிரிந்து சென்ற அனைவரும் ஓரணியில் சேர்ந்து, கூட்டணி அமைத்தால் மட்டுமே, தமிழகத்தில் வெற்றி பெறும் சூழ்நிலை உருவாகும். ஜெயலலிதாவின் விருப்பப்படி, பல நூற்றாண்டுகள் அதிமுக ஆட்சியில் அமர வேண்டும் என்பது தான் என்னுடைய இலக்காகும். அதிமுகவை மக்கள் இயக்கமாக எம்ஜிஆர் உருவாக்கினார். அதனை ஜெயலலிதா திறம்பட வழிநடத்தினார். அந்த வழியில் வந்த இயக்கத்தை, யாராவது பிளவுபடுத்த நினைத்தால் அது முடியாது. அதிமுகவுக்கு எந்த பின்னடைவும் ஏற்படாது.
தமிழகத்தில் யார் ஆட்சி செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்வது மக்கள்தான். முதல்வரை இறுதி செய்யும் பொறுப்பும், கடமையும் அவர்களிடம்தான் உள்ளது. கட்சி தொடங்கிய ஒவ்வொருவரும், முதல்வராக வருவோம் என்று தான் ஆசைப்படுவார்கள். ெபாதுவாக ஒரு அரசியல் கட்சி இயக்கத்தை நடத்துபவர்கள், தலைமை பொறுப்பில் இருப்பவர்கள், அரசியல் நாகரீகத்துடன் பேச வேண்டும். தவெக தலைவர் விஜய்யின் பேச்சு ஏற்புடையதல்ல. அவர் பெருந்தன்மையோடு பேச வேண்டும். இப்போது தான் அவர் கட்சி தொடங்கியுள்ளார். அவருடைய கருத்துக்கள் மக்களை ஈர்க்கும் விதமாக இருக்க வேண்டும். ஆனால், மாநாட்டில் அவர் பேசிய கருத்துக்கள், அரசியல் ரீதியான ஈர்க்கின்ற கருத்தாக இல்லை.