விஜய் பிரசாரத்தின் போது 41 பேர் பலியான வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்: தவெக மனு ஐகோர்ட் கிளையில் அக்.3ல் விசாரணை
மதுரை: தவெக துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் கூட்டங்களுக்கு கேட்கும் இடங்களில் அனுமதி தருவதில்லை. பெரிய அளவிலான கூட்டத்திற்கு அனுமதிக்க முடியாத, சிறிய பகுதிகளில் அனுமதி வழங்கியுள்ளனர். கடந்த 27ம் தேதி கரூரில் விஜய் பங்கேற்ற கூட்டத்தின்போது காவல்துறை மற்றும் உள்ளூர் அரசியல் பிரமுகரால் தேவையற்ற விரும்பத்தகாத நிகழ்வு நடந்துள்ளது. விஜய் பேச துவங்கியதும், மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அப்போதுதான் அதிக நெரிசல் ஏற்பட்டுள்ளது. 10 நிமிடம் தான் விஜய் பேசினார். அப்போது கூட்டத்திற்குள் புகுந்த சமூகவிரோதிகள் கற்கள் மற்றும் செருப்புகளை வீசினர். இதனால், ஏற்பட்ட நெரிசலால் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.
எனவே, இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடக்காவிட்டால் உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வர முடியாது. பல்வேறு சந்தேகங்கள் உள்ளன. எனவே, சம்பவ இடத்திலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ள சிசிடிவி காட்சிகளைப் பாதுகாக்குமாறும், பாதிக்கப்பட்டோர் மற்றும் அவர்களது குடும்பத்தினரை சந்திக்க விஜய் உள்ளிட்ட எங்களை தடுக்கக் கூடாது என்றும், 27ம் தேதி கரூரில் நடந்த துயரச் சம்பவம் குறித்த வழக்கு விசாரணையை, சிபிஐக்கு மாற்றி உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். இந்த மனு மீதான விசாரணை விடுமுறை கால அமர்வில் வரும் 3ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.