விஜய் மல்லையா, நிரவ் மோடி விரைவில் நாடு கடத்தல்?.. திகார் சிறையில் இங்கி. அதிகாரிகள் ஆய்வு
புதுடெல்லி: விஜய் மல்லையா, நிரவ் மோடி ஆகியோர் விரைவில் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார்கள். இது தொடர்பாக இங்கிலாந்து குழு திகார் சிறையில் ஆய்வு நடத்தி உள்ளது. கிங் பிஷர் நிறுவனர் விஜய் மல்லையா, இந்திய வங்கிகளில் ரூ.9,000 கோடி கடன் பெற்று அதை முறையாக திருப்பிச் செலுத்தாமல் 2016-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு தப்பிச் சென்றார். அதேபோல், வைர வியாபாரியான நீரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.14,000 கோடி கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் 2018-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு தப்பிச் சென்றார்.விஜய் மல்லையா, நீரவ் மோடி இருவரையும் இந்தியாவுக்கு அழைத்து வரும் முயற்சியில் ஒன்றிய அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடர்பான வழக்கு இங்கிலாந்து நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் இங்கிலாந்து நீதித்துறை அதிகாரிகள் டெல்லி வந்து திகார் சிறையை ஆய்வு நடத்தி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த குழு திகாரில் உள்ள உயர் பாதுகாப்பு அறைகளுக்கு சென்று கைதிகளுடன் உரையாடியது. இந்தியாவிற்கு நாடு கடத்தப்படும் குற்றவாளிகள் பாதுகாப்பான சூழ்நிலையில் தங்க வைக்கப்படுவார்கள் என்றும் தேவைப்பட்டால் உயர் மட்ட கைதிகளை தங்க வைக்க சிறைக்குள் தனி பிரிவு கட்டப்படலாம் என்று இங்கிலாந்து குழுவிடம் இந்திய அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். இந்தியாவிடம் இருந்து 178 நாடு கடத்தல் கோரிக்கைகள் வெளிநாடுகளில் நிலுவையில் உள்ளன. அவற்றில் கிட்டத்தட்ட 20 கோரிக்கைகள் இங்கிலாந்திடம் உள்ளன. இதில் விஜய் மல்லையா, நிரவ் மோடி முக்கியமானவர்கள்.