விஜய் பிரசாரத்தில் 41 பேர் பலி: 11 நாட்களுக்கு பின் கரூர் திரும்பிய சிபிஐ அதிகாரிகள்
கரூர்: தீபாவளி கொண்டாட சொந்த ஊர்களுக்கு சென்ற சிபிஐ அதிகாரிகள் இன்று கரூர் திரும்பினர். அவர்கள் 41 பேர் பலி வழக்கில் பாதிக்கப்பட்டவர்களிடம் விரைவில் விசாரணை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூரில் கடந்த மாதம் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரசாரத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி விசாரணை நடத்த குஜராத் கேடரை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி பிரவீன்குமார் தலைமையில் ஏடிஎஸ்பி முகேஸ்குமார், டிஎஸ்பி ராமகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் மனோகரன் மற்றும் தலைமை காவலர் ஆகியோர் கொண்ட குழுவினர் கடந்த 17ம் தேதி கரூர் வந்தனர்.
கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பயணியர் விடுதியில் தங்கியிருந்த சிபிஐ குழுவினர், ஒரே ஒரு முறை மட்டும் சம்பவம் நடந்த வேலுச்சாமிபுரத்தை காரில் இருந்தபடியே பார்வையிட்டனர். பின்னர் இதுதொடர்பான விசாரணைக்காக எங்கும் அவர்கள் செல்லவில்லை. ஒரே ஒரு முறை மட்டும் வருவாய்த்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகளை பயணியர் விடுதிக்கு நேரில் வரவழைத்து விசாரித்த சிபிஐ குழுவினர், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை கூட நேரில் சந்தித்து விசாரிக்க வில்லை. இந்நிலையில் தீபாவளியை கொண்டாடுவதற்காக சொந்த ஊர்களுக்கு கடந்த 19ம் தேதி புறப்பட்டு சென்ற பிரவீன்குமார், ஏடிஎஸ்பி முகேஸ்குமார், டிஎஸ்பி ராமகிருஷ்ணன் ஆகியோர் 11 நாட்களாகியும் கரூர் திரும்பவில்லை. பயணியர் விடுதியில் சிபிஐ குழுவில் உள்ள இன்ஸ்பெக்டர் மனோகரன் மற்றும் தலைமை காவலர் மட்டுமே தங்கியிருந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக அவர்களும் யாரிடமும் எந்த ஒரு விசாரணையும் நடத்தவில்லை. இதனால் இந்த வழக்கு விசாரணையில் தொய்வு ஏற்பட்டது. இந்நிலையில் தீபாவளி கொண்டாடுவதற்காக சொந்த ஊர்களுக்கு சென்றிருந்த சிபிஐ அதிகாரிகள் 3 பேரும் இன்று கரூருக்கு வந்தனர். அவர்கள் விரைவில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து விசாரணை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.