விஜய் கரூர் பிரசார கூட்டத்தில் 41 பேர் பலியான வழக்கு: சிபிஐ விசாரணையை நிராகரித்தது உயர் நீதிமன்ற கிளை
* நெடுஞ்சாலைகளில் அரசியல் கூட்டங்கள் நடத்த தடை விதிப்பு
* நீதிமன்றத்தை அரசியல் மேடையாக்க வேண்டாம் என நீதிபதிகள் கடும் காட்டம்
மதுரை: கரூரில் விஜய் பிரசார கூட்டத்தில் 41 பேர் பலியான விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரிய மனுக்களை தள்ளுபடி செய்த ஐகோர்ட் கிளை, நெடுஞ்சாலைகளில் அரசியல் கட்சிகளின் கூட்டத்திற்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது. மேலும், நீதிமன்றத்தை அரசியல் மேடையாக்க வேண்டாம் என நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். தவெக தலைவரும் நடிகர் விஜய் கடந்த செப். 27ம் தேதி கரூரில் பிரசாரம் செய்தபோது, நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உள்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
தகவல் அறிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அன்று இரவே, கரூருக்கு சென்று இறந்தவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி, உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். மேலும், இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம், காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் என நிவாரணம் அறிவித்தார். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அமைச்சர்கள் அன்பில் மகேஸ் உள்ளிட்ட பல அமைச்சர்கள் கரூர் அரசு மருத்துவமனைக்கு சென்று உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மருத்துவமனைக்கு வந்து இறந்தவர்களின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறினர். ஆனால், தவெக தலைவர் விஜய் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்காமல் சம்பவம் நடந்ததும் கரூரில் இருந்து திருச்சிக்கு சென்று இரவோடு இரவாக சென்னைக்கு சென்று விட்டார். இது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்ய ஓய்வு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இந்த ஆணையம் விசாரணையை தொடங்கி நடத்தி வருகிறது. இதோடு கரூர் சம்பவத்தின் புதிய விசாரணை அதிகாரியாக ஏடிஎஸ்பி பிரேம் ஆனந்த் நியமனம் செய்யப்பட்டார்.
இந்நிலையில், கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரிக்கவும், தவெகவின் அங்கீகாரத்தை ரத்து செய்யவும், அரசியல் கட்சி கூட்டங்களுக்கு பணம் கொடுத்து ஆட்களை திரட்டுவதை தடுக்க வழிகாட்டுதல்களை உருவாக்கவும், கரூர் நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் அரசு இழப்பீடு வழங்கவும், கரூர் நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.1 கோடியை நடிகர் விஜய் இழப்பீடாக வழங்கவும், அரசியல் கட்சிகளின் கூட்டங்கள் தொடர்பாக ஒருங்கிணைந்த வழிகாட்டுதல்களை உருவாக்கக் கோரியும் ஐகோர்ட் மதுரை கிளையில் கே.கே.ரமேஷ், செந்தில்கண்ணன், கதிரேசன், பிரபாகர பாண்டியன், பாஜ வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி, எம்.எல்.ரவி, தங்கம் ஆகியோர் தனித்தனியாக 7 மனுக்களை செய்திருந்தனர்.
இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதிகள் எம்.தண்டபானி, எம்.ஜோதிராமன் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது நீதிபதிகள், ‘‘நெடுஞ்சாலையில் பிரசாரக் கூட்டத்துக்கு எந்த அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டது? குடிமக்கள் எந்த கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், பாதுகாப்பு அமைப்பான காவல்துறை முறையாக செயல்பட வேண்டும். பொதுமக்களின் உயிரை பாதுகாப்பது அரசின் கடமை’’ என்றனர். கூடுதல் அட்வகேட் ஜெனரல் ரவீந்திரன் ஆஜராகி, ‘‘தேசிய நெடுஞ்சாலையில் விஜய் பிரசாரக் கூட்டத்துக்கு அனுமதிக்கப்படவில்லை. கரூர் வேலுச்சாமிபுரத்தில் சாலையின் வடக்கே என குறிப்பிட்டுத்தான் அனுமதி தரப்பட்டுள்ளது. அதுவும் அவர்கள் தரப்பில் கேட்கப்பட்ட இடம் தான். இது மாநில நெடுஞ்சாலை என்ற வரம்பிற்குள் வராது’’ என்றார்.
உள்துறை செயலாளர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆஜராகி, ‘‘இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கட்சி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழக அரசு துரிதமாக செயல்பட்டு வருகிறது. பொதுவாக நெடுஞ்சாலைகளில் கூட்டம் நடத்த அனுமதி வழங்குவது கிடையாது. சென்னை ஐகோர்ட் உத்தரவுப்படி அனுமதி வழங்குவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. அதுவரை நெடுஞ்சாலைகளில் எந்த அரசியல் கட்சிக்கும் அனுமதி வழங்கப்படாது. தேவையான இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. ரத்தக்கறையின் ஈரம் காய்வதற்குள்ளாக அரசியல் காரணங்களுக்காக நீதிமன்றத்தை நாடியுள்ளனர். தேவையற்ற பொய் வதந்திகளை பரப்பி வருகின்றனர். மனுதாரர்கள் தமிழ்நாடு அரசையோ, காவல் துறையையோ நேரடியாக குற்றம் சாட்டவில்லை. இந்த மனுக்களை வழிகாட்டு நெறிமுறைகள், இழப்பீடு மற்றும் சிபிஐ விசாரணை கோரிய மனுக்களாக பிரித்து பார்க்க வேண்டும்’’ என்றார்.
இதையடுத்து நீதிபதிகள், ‘‘கரூர் சம்பவம் நடந்து ஒரு வாரம் ஆகிறது. வழக்குப்பதிவு செய்து விசாரணை துவக்க நிலையில் உள்ளது. எனவே தற்போது எந்த முடிவுக்கும் வர முடியாது. அரசியல் கட்சி கூட்டங்களுக்கான அனுமதி தொடர்பாக, அரசின் வழிகாட்டுதல்கள் பிறப்பிக்கும் வரை தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் எந்த அரசியல் கட்சிகளின் கூட்டத்திற்கும் அனுமதி வழங்க தடை விதிக்கப்படுகிறது. வழிகாட்டுதல்கள் வெளியான பின் சம்பந்தப்பட்டவர்கள் மூலம் அடிப்படை வசதிகளான குடிநீர், உணவு, கழிப்பறை, மருத்துவம், ஆம்புலன்ஸ் வசதி மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல் தொடர்பாக பிரமாண பத்திரம் எழுதி வாங்க வேண்டும். இழப்பீடு அரசால் வழங்கப்பட்டுள்ளதால் அது தொடர்பான மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகிறது.
இது ஒரு துயர சம்பவம், விசாரணை நடைபெற்று வருகிறது. நீதிமன்றத்தை அரசியல் மேடையாக்க வேண்டாம். கரூர் போலீசார் நடத்தி வரும் விசாரணை ஆரம்ப நிலையில் இருக்கும்போது எப்படி சிபிஐ விசாரணை கோரமுடியும்? விசாரணை முடிவில் திருப்தி இல்லை என்றால்தான் சிபிஐ விசாரணை கேட்க முடியும். தொடக்க நிலையிலேயே விசாரணையை மாற்றும்படி எப்படி கேட்க முடியும்? பாதிக்கப்பட்டவர்களுடன் மனுதாரருக்கு எந்தவகையிலும் தொடர்பில்லை. பாதிக்கப்பட்ட யாரும் மனு செய்யவில்லை. விசாரணையை மாற்ற கோரி மனுதாரருக்கு என்ன தகுதியுள்ளது. எனவே, சிபிஐ விசாரணை கோரிய மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன’’ என்று உத்தரவிட்டனர்.
* ரத்தக்கறையின் ஈரம் காய்வதற்குள்ளாக அரசியல் காரணங்களுக்காக நீதிமன்றத்தை நாடியுள்ளனர். தேவையற்ற பொய் வதந்திகளை பரப்பி வருகின்றனர்.
* கரூர் போலீசார் நடத்தி வரும் விசாரணை ஆரம்ப நிலையில் இருக்கும்போது எப்படி சிபிஐ விசாரணை கோரமுடியும்? தொடக்க நிலையிலேயே விசாரணையை மாற்றும்படி எப்படி கேட்க முடியும்?
* பாதிக்கப்பட்டவர்களுடன் மனுதாரருக்கு எந்தவகையிலும் தொடர்பில்லை. பாதிக்கப்பட்ட யாரும் மனு செய்யவில்லை. விசாரணையை மாற்ற கோர மனுதாரருக்கு என்ன தகுதியுள்ளது.
* தவெக சார்பில் மனு தாக்கல் இல்லை
கரூர் சம்பவம் தொடர்பாக தவெக சார்பில் உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணியின் வீட்டிற்கு சென்று முறையிட்டதாகவும், தங்களின் மனுவை கடந்த திங்களன்று ஐகோர்ட் கிளையில் விசாரிப்பதாக நீதிபதி கூறியதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்திருந்தார். அவர் கூறியது போல விசாரணை எதுவும் கடந்த திங்களன்று நடைபெறவில்லை. அதே நேரம் ஐகோர்ட் கிளையில் விடுமுறை கால நீதிமன்றத்தின் விசாரணைக்கான மனுக்களை கடந்த செப். 30ல் தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தவெக சார்பில் அப்போதும் எந்த மனுவும் தாக்கல் செய்யப்படவில்லை. ஒருவேளை மற்ற மனுக்கள் நேற்று விசாரணைக்கு வந்தபோது, தவெக தரப்பினர் ஆஜராகி தங்கள் தரப்பையும் வழக்கில் இணைத்துக் கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையிலும் கூட அவர்கள் தரப்பில் யாரும் எந்தவித முறையீடும் செய்யவில்லை. கடைசிவரை தவெக தரப்பில் எந்த மனுவும் தாக்கல் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
* மனுதாரரை மிரட்டிய விஜய் கட்சி நிர்வாகிகள்
அரசியல் கட்சிகளின் கூட்டங்கள், பேரணி போன்றவற்றிற்கு கட்டுப்பாடுகள் மற்றும் வழிகாட்டுதல்கள் பிறப்பிக்கக் கோரி மனு செய்த கதிரேசனின் வீட்டிற்கு வந்து, தவெகவினர் மிரட்டியதாக அவரது வழக்கறிஞர் அமரவேல் பாண்டியன் குற்றம் சாட்டியுள்ளார். ‘‘நீதான் கதிரேசனா? எங்க தலைவர் மேல கேஸ் போட்டிருக்கியாமே? நீ வீட்ல இருக்காத.. எங்கயாவது ஓடிப்ேபாயிரு’’ என வீட்டிற்கு வந்தவர்கள் மிரட்டியதாகவும் அவர் கூறியுள்ளார்.
7 மனுக்கள் என்னென்ன?
* அரசியல் கட்சி கூட்டங்களுக்கு பணம் கொடுத்து ஆட்களை திரட்டுவதை தடுக்க வழிகாட்டுதல்களை உருவாக்கவேண்டும். - கதிரேசன், தங்கம்
* நெல்லையில் நடக்க உள்ள விஜய் கூட்டத்திற்கு போலீசார் அனுமதி வழங்கக்கூடாது. - பிரபாகரபாண்டியன்
* கரூர் நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் அரசு இழப்பீடு வழங்க வேண்டும். கரூர் நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.1 கோடியை நடிகர் விஜய் இழப்பீடாக வழங்க வேண்டும். தவெகவின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும். - ரமேஷ்
* கரூர் சம்பவம் குறித்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும். - செந்தில்கண்ணன், ரவி, மணி