மதுரை மாநாட்டில் விஜய் பேசியது அட்ரஸ் இல்லாத லெட்டர்: கமல்ஹாசன் பரபரப்பு பேட்டி
சென்னை: மதுரை மாநாட்டில் விஜய் பேசியது அட்ரஸ் இல்லாத லெட்டர் போன்றது. அதற்கு நான் பதில் போட முடியுமா? என நடிகர் கமல்ஹாசன் கூறினார். மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் நடிகர் கமல்ஹாசன் டெல்லியில் இருந்து நேற்று இரவு, ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் சென்னை வந்தார். அப்போது, அவர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த மசோதாவில், எத்தனை பேர் கையெழுத்து போட்டனர்? எத்தனை பேர் கையெழுத்து போடவில்லை என்பதெல்லாம், இங்கு பேசக்கூடாது. அது எல்லாம் நாடாளுமன்றத்தில் நடந்தது.அதுகுறித்து இங்கு பொது இடத்தில் பேசக்கூடாது.
நடிகர் விஜய் மதுரையில் மாநாட்டில், வருகின்ற சட்டமன்றத் தேர்தலில், தவெகவுக்கும், திமுகவுக்கும் தான் நேரடி மோதல். அதோடு சினிமா மார்க்கெட் போன பின்பு நான் அரசியலுக்கு வரவில்லை. மார்க்கெட் இருக்கும்போதே, படை பலத்துடன் தான் அரசியலுக்கு வந்திருக்கிறேன் என்று பேசி உள்ளார். இதில், கருத்து சொல்ல என்ன இருக்கிறது. எனது பெயரை சொல்லி இருக்கிறாரா? இல்லையேல் வேறு யார் பெயரை யாவது சொல்லி இருக்கிறாரா? இதேபோல் அட்ரஸ் இல்லாத லெட்டருக்கு, நான் பதில் போடலாமா? அது தவறு. அவர் எனது தம்பி. இவ்வாறு அவர் கூறினார்.