விஜய் கூட்ட நெரிசலில் 41 பேர் பலி: கரூர் டிஎஸ்பி, பாஜ நிர்வாகியிடம் சிபிஐ 4 மணி நேரம் விசாரணை
கரூர்: கரூரில் கடந்த செப்டம்பர் 27ம்தேதி விஜய் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. நெரிசலில் சிக்கி பலியான கரூரை சேர்ந்த சுகன்யாவின் கணவர் தெய்வேந்திரன், கொடுமுடியை சேர்ந்த சதீஷின் சகோதரர் சக்திவேல் உள்பட 3 பேரின் குடும்பத்தினர் நேற்று காலை 10 மணியளவில் சிபிஐ விசாரணை அலுவலகத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர்.
தொடர்ந்து, கரூர் டிஎஸ்பி செல்வராஜ் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் காலை 10.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை சுமார் 4 மணி நேரம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விஜய் பிரசாத்திற்காக தவெகவினர் அனுமதி கேட்டது தொடர்பான விபரங்கள், பாதுகாப்பு ஏற்பாடுகள், பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களின் விபரங்கள் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.
கரூர் கூட்ட நெரிசல் துயர சம்பவம் தொடர்பாக டிஜிபியிடம் புகார் அளித்திருந்த சேலம் மாவட்ட பாஜ மாநில செயற்குழு உறுப்பினர் பூபதி, நேற்று பிற்பகல் 3 மணியளவில் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் ஒரு மணி நேரம் விசாரணை நடந்தது.