விஜய் கூட்ட நெரிசலில் 41 பேர் பலி: கரூர் கோர்ட்டில் முதல் தகவல் அறிக்கையை சமர்ப்பித்த சிபிஐ
கரூர்: கரூர் வேலுசாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் கடந்த 27ம் தேதி பிரசாரம் செய்தபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் பெண்கள், குழந்தைகள் உள்பட 41 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சிபிஐ விசாரணை நடத்த கடந்த 13ம் தேதி உத்தரவிட்டது. சிபிஐ விசாரணையை கண்காணிக்க ஒரு குழுவும் நியமிக்கப்பட்டது. இந்நிலையில் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி ஐபிஎஸ் அதிகாரி பிரவீன் குமார் தலைமையிலான சிபிஐ அதிகாரிகள் கடந்த 17ம் தேதி கரூர் வந்தனர். கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பயணியர் விடுதியில் முகாமிட்டு சிபிஐ குழுவினர், வழக்கை விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் 41 பேர் பலி வழக்கில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை சிபிஐ குழுவை சேர்ந்த ஏஎஸ்பி முகேஷ் குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் மனோகர் கரூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1ல் நேற்று மாலை வழங்கினார். இதைதொடர்ந்து உயிரிழந்தவர்களின் குடும்பங்கள், படுகாயம் அடைந்தவர்களை பயணியர் விடுதிக்கு நேரில் வரவழைத்து சிபிஐ குழுவினர் விசாரணை நடத்த திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.