விஜய் ஒன்றரை வயசு குழந்தை... மாஜி அமைச்சர் உதயகுமார் அட்டாக்
மதுரை: அதிமுக மாஜி அமைச்சர் உதயகுமார், மதுரையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: கட்சி தொடங்கியவர்கள் மாநாடு நடத்தலாம். ஆனால் மாநாட்டில் என்ன பேச வேண்டும் என்ற வரைமுறை உள்ளது. மற்றவர்களை தாழ்த்தி பேசுவதை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். மாநாடு நடத்திய விஜய் தனக்கு யார் அரசியல் ஆசான் என்று சொல்லவில்லை. இன்றைக்கு அதிமுக எடப்பாடி பழனிசாமியின் கையில் தான் உள்ளது. இதில் விஜய்க்கு சந்தேகம் வேண்டாம்.
விஜய் வாய்க்கு வந்ததை பேசி வருகிறார். இதனால் அவருக்கு தான் பின்னடைவே தவிர எடப்பாடிக்கு எந்த பின்னடைவும் ஏற்படப் போவதில்லை, விஜய் ஒன்றரை வருட குழந்தை தான். கட்சி நடத்தலாம், மாநாட்டை நடத்தலாம், ஆனால் மக்களை நாங்கள் தான் காப்பாற்ற போகிறோம் என்பது போல பேசுவதை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். மாநாட்டிற்கு கூட்டம் வரும். மாநாட்டில் பேசுவதை மக்கள் கேட்க மாட்டார்கள். தேர்தலில் தான் அதற்குரிய மதிப்பு அளிப்பார்கள். தமிழ்நாட்டில் திமுகவிற்கும், அதிமுகவிற்கும் தான் போட்டி. இவ்வாறு கூறினார்.