விஜய் பிரசாரத்தில் 40 பேர் பலி: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட என்.ஆர்.தனபாலன் வலியுறுத்தல்
சென்னை: பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் அறிக்கை; கரூரில் நடைபெற்ற த.வெ.க. தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் 40 பேர்உயிரிழப்புக்கு காரணமானவர்களை கண்டுபிடிக்க சி.பி.ஐ. விசாரணை நடத்தவேண்டும். விஜய் பேசிக்கொண்டிருக்கும்போது அதிகமான கூட்டம் கூடியதை கவனத்தில் கொண்டு கூடுதலான பாதுகாப்பு ஏற்பாடு செய்வதற்கு பதிலாக கூட்டத்திற்குள் காவல்துறை தடியடி நடத்தி கலைத்தது, கூட்டத்திற்குள் அடிக்கடி ஆம்புலன்ஸ் வாகனங்கள் வந்து சென்றது, குறிப்பாக ஒரு வாகனத்தில் த.வெ.க. கொடி கட்டி வந்தது, தீயணைப்பு வாகனங்கள் இல்லாதது, மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதுபோன்ற ஏராளமான குளறுபடிகளால் தான் 40 பேர் உயிரிழப்புக்கு காரணம் என்று பொதுமக்கள் கூறுகிறார்கள்.
ஆனால் த.வெ.க. நிர்வாகிகள் மீது வழக்குபதிவு செய்திருப்பது துரதிஷ்டமானது. அதே நேரத்தில் இரவோடு இரவாக நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையில் 1 நபர் விசாரணை கமிட்டி அமைத்து அரசு யாரை சமாதானப்படுத்தியது என்பதையும் விளக்க வேண்டும். உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். அதே நேரத்தில் நிரபராதிகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக உண்மையான காரணங்களை அறிய சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.