விஜய் பிரசாரத்தில் நெரிசலில் சிக்கி 36 பேர் பலி அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்
சென்னை: தவெக தலைவர், நடிகர் விஜய் பிரச்சாரத்தில் நெரிசலில் சிக்கி 36 பேர் உயிரிழப்பு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
எடப்பாடி பழனிசாமி (அதிமுக பொதுச்செயலாளர்): கரூரில் விஜய் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 36பேர் உயிரிழந்த செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஓ.பன்னீர்செல்வம் (முன்னாள் முதல்வர்): விஜய் பிரசாரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவி வழங்கவும், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க வேண்டும்.
செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ (காங்கிரஸ் கட்சி தலைவர்): விஜய் கூட்டத்தில் நெரிசல் காரணமாக 36 பேர் உயிரிழந்திருக்கும் செய்தி நெஞ்சை பதற வைக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
வைகோ (மதிமுக பொதுச்செயலாளர்): கரூரில் தவெக தலைவர் விஜய் கூட்ட நெரிசலில் சிக்கி, குழந்தைகள், பெண்கள் உட்பட 36 பேர் உயிரிழந்த செய்தி நெஞ்சை தாக்குகிறது.போர்க்கால நடவடிக்கையாக தமிழக அரசின் அமைச்சர்களையும், அதிகாரிகளையும் செயல்பட முதல்வர் அறிவுறுத்தி உள்ளார். உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு மதிமுக சார்பில் எனது கண்ணீர் அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறேன்.
பெ.சண்முகம் (சிபிஎம் மாநில செயலாளர்): கரூரில் த.வெ.க தலைவர் விஜய் பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் நெரிசலில் சிக்கி இதுவரை 36பேர் உயிரிழப்பு என்பது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. இதில் ஏராளமானோர் குழந்தைகள் என்பது மிகப்பெரிய சோகம். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்புமணி (பாமக தலைவர்): கரூர் நெரிசல் மற்றும் உயிரிழப்புக்கான காரணங்கள் குறித்து உயர்நிலை விசாரணைக்கு ஆணையிட வேண்டும். நெரிசலில் சிக்கி உயிரிழந்த அனைவரின் குடும்பங்களுக்கும் தலா ரூ.10 லட்சம் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும்.
அண்ணாமலை (முன்னாள் பாஜக தலைவர்): கரூரில் நடந்த சம்பவம் மிகவும் அதிர்ச்சியும், வருத்தமும் அளிக்கிறது. உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இதுபோல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் வீரபாண்டியன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
* துணை முதல்வர் உதயநிதி உருக்கம்
தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட எக்ஸ் தளபதிவு: கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக வரும் செய்திகள் மிகுந்த வேதனை அளிக்கின்றன. இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். நெரிசலில் சிக்கி மயக்கமடைந்தோர் உடல்நலம் குன்றியோருக்கு முதல்வர் உத்தரவின்பேரில் கரூர் அரசு மருத்துவமனையில் உடனுக்குடன் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த இக்கட்டான சூழலில் அரசின் நடவடிக்கைக்கும் மருத்துவக் குழுவுக்கும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டுகிறோம். இவ்வாறு துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ்தள பதிவில் கூறியுள்ளார்.
* அமித்ஷா, கார்கே ஆறுதல்
ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா: கரூரில் நடந்த துயரத்தை தாங்கும் வலிமையையும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே: கரூரில் நடந்த அரசியல் பரப்புரையில் ஏற்பட்ட துரதிருஷ்டவசமான கூட்ட நெரிசலில் சிக்கி பல அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல். பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளையும் வழங்க அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றவும் தொண்டர்களை கேட்டுக்கொள்கிறேன்.