விஜய் பிரசார நெரிசலில் சிக்கி பலியான 39 பேரின் குடும்பங்களுக்கு ரூ.20 லட்சம் வழங்கிய தவெக: வங்கி கணக்கில் செலுத்தினர்
கரூர்: விஜய் பிரசாரத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 39 பேரின் குடும்பத்தினருக்கு தவெக சார்பில் ரூ.20 லட்சம் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. குடும்ப பிரச்னையால் 2 பேருக்கு யாரிடம் நிவாரணம் கொடுப்பது என தெரியாமல் கொடுக்கவில்லை. கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27ம்தேதி தவெக தலைவர் விஜய் பிரசாரம் செய்தபோது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர்.உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு சார்பில் தலா ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்கப்பட்டது.
மேலும் பல்வேறு அரசியல் கட்சிகளும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கியுள்ளனர். உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.20 லட்சம் வழங்கப்படும் என தவெக சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. கரூருக்கு நேரில் சென்று விஜய் இந்த நிதியை வழங்குவதாக முதலில் கூறப்பட்டது. திடீரென அது ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் உயிரிழந்தவர்களில் 39 குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் தவெக சார்பில் நேற்று வழங்கப்பட்டது. சென்னையில் இருந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரின் வங்கி கணக்குகளுக்கு நேரடியாக பணம் செலுத்தப்பட்டது.
கரூர்-கோதூர் ரோட்டில் கோமாச்சிமேடு பகுதியில உள்ள கே.கே.நகர்2வது கிராசில் வசிக்கும் லாரி டிரைவர் பெருமாளின் 2 மகள்கள் பழனியம்மாள்(11), கோகிலா(8) ஆகியோர் நெரிசலில் சிக்கி பலியாகினர். அவரது வங்கி கணக்குக்கு ரூ.40 லட்சம் செலுத்தப்பட்டுள்ளது. இதேபோல், ஆனந்தஜோதி என்பவரின் மனைவி ஹேமலதா, குழந்தைகள் சாய் லக்ஷனா, சாய் ஜீவா ஆகியோர் உயிரிழந்தனர். அவரது வங்கி கணக்குக்கு ரூ.60 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
இதே போல் உயிரிழந்த 39 பேர்களின் குடும்பங்களுக்கும் தலா 20 லட்சம் ரூபாய் அவரவர் வங்கி கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் 2 பேருக்கான நிவாரண தொகையை குடும்ப பிரச்னையால், யாரிடம் கொடுப்பது என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்களுக்கான நிவாரண தொகை தவெக தரப்பில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.