விஜய்யை கைது செய்தால் தவறான முன்னுதாரணமாகும் முதல்வர் நியாயமாக நடந்ததாக சொன்னால் சப்போர்ட் என்பதா? டிடிவி.தினகரன் ஆவேசம்
திருவெறும்பூர்: திருச்சி மாவட்டம், திருவெறும்பூரில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: எம்ஜிஆர் கட்டமைத்த அடிப்படை விதிகளை எல்லாம் ஒதுக்கிவிட்டு எடப்பாடி பழனிசாமி அதிமுகவை, இடிஎம்கே வாக மாற்றிவிட்டார். எடப்பாடி பழனிசாமியை இந்த தேர்தலில் வீழ்த்தாமல் அமமுக கட்சி ஓயாது. கரூரில் நடந்த துயர சம்பவத்திற்கு விஜய்யும் அவரது கட்சியோ பொறுப்பல்ல. அது ஒரு விபத்து.
ஆனால், தார்மீக பொறுப்பு என்று ஒன்று உள்ளது. தார்மீக பொறுப்பு என்பது குற்றத்தை ஒத்துக் கொள்வது அல்ல. கரூர் விபத்திற்கு விஜய்யை கைது செய்தால் ஒரு தவறான முன் உதாரணமாக மாறிவிடும். எல்லா கட்சிகளும் கூட்டம், ரோடுஷோ உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துவோம். அதில் விபத்து நடப்பது இயல்பு. அதற்கு தார்மீக பொறுப்பு தான் ஏற்க முடியுமே ஒழிய குற்றவாளியாக அவர்களை ஆக்க முடியாது.
காவல்துறை உஷாராக இருந்தாலும் விபத்து நடக்க வாய்ப்பு உள்ளது. அதற்காக அந்த கட்சித் தலைவரை குற்றம் சாட்டுவது தவறு. அதை தான் முதல்வரும் உணர்ந்துள்ளார். அவருக்கு 50 ஆண்டு அரசியல் அனுபவம் உள்ளது. ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் அனுபவமிக்க தலைவராக உள்ளார். எதிர்க்கட்சியினர் விடும் சவால்களை பெரிதுபடுத்தாமல் அவர்கள் கொடுக்கும் அழுத்தத்தை பெரிதுபடுத்திக் கொள்ளாமல் நிதானமாக செயல்படுகிறார்.
மற்றவர்கள் கூறுவது போல் நடந்தால் அது திமுகவையும் பாதிக்கும். மற்ற அரசியல் கட்சிகளுக்கும், இது பாதிக்கும். தவறான முன் உதாரணத்தை உருவாக்கும் என தமிழக முதல்வர் நினைக்கிறார் என கூறுவதில் என்ன தவறு உள்ளது. அதற்கு நான் சப்போர்ட் செய்வதாக கூறுகின்றனர். நியாயமாக பேசினால் சப்போர்ட் என்று கூறுவதா? நீங்கள் ஆட்சியில் இருந்தபோது தூத்துக்குடியில் போராட்டம் நடத்தியவர்களை குருவியை சுடுவது போல் சுட்டார்களே அந்த துறைக்கு அப்பொழுது நீங்கள் தானே அமைச்சராக இருந்தீர்கள் அப்பொழுது உங்களை தானே கைது செய்திருக்க வேண்டும்.
இனி, இது போன்ற கூட்டங்களில் ஒரு உயிர் கூட பலியாக கூடாது. அதற்காக எல்லா கட்சியினரும் ஒன்று சேர்ந்து கலந்து ஆலோசித்து முடிவு செய்ய வேண்டும் என தமிழக முதல்வர் கூறி வருகிறார். அதை நாம் கடைபிடிக்க வேண்டும். காவல்துறைக்கு நாம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அப்போது இது போன்ற விபத்துக்கள் நடக்காது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
* எழவு வீட்டில் கூட்டணி பேசுவதா?
‘எழவு விழுந்த வீடுகளில் கடந்த ஒரு வார காலமாக துயரத்தில் இருப்பார்கள். ஆனால் கூட்டணி பற்றி பேசினால் அவர்கள் என்ன நினைப்பார்கள். கூட்டணி பேசுவதற்கு இதுவா நேரம். அந்த ஒரு நாகரிகம் கூட இல்லாமல் இந்த நேரத்தில் தவெகவை கூட்டணிக்கு வர வேண்டும் என குள்ள நரித்தனமாக ஆட்சியாளர்கள் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தி எடப்பாடி அழைக்கிறார்’ என்று டிடிவி.தினகரன் தெரிவித்தார்.
* 18 பேர் இல்லைனா அப்போவே க்ளோஸ்: உதயகுமாருக்கு குட்டு
உங்களை நம்பி வந்த 18 எம்எல்ஏக்களை அனாதையாக்கிவிட்டீர்கள் என்று உதயகுமார் கூறி உள்ளாரே என்று கேட்டதற்கு டிடிவி.தினகரன் கூறுகையில், ‘பழனிசாமி ஆட்சியில் தொடர 18 எம்எல்ஏக்கள் ஆதரவாக வாக்களித்தனர். அவர்களை பதவி நீக்கம் செய்தது பழனிசாமி. தம்பி உதயகுமார் பேசுறதா இருக்காது? மார்பிங்கா இருக்க போகுது.
இல்லாட்டி சதுரகிரி மலையில் எங்கையாச்சும் யாராவது பிடிச்சு வெச்சுட்டாங்களானு பாருங்க... போலீசில சொல்ல சொல்லுங்க... அவரு தப்பா சொல்ல மாட்டாரே... சரியா சொல்லுவாரே... சந்தனக்கட்டை வீரப்பன் மாதிரி திடீர் திடீரென வீடியோ வெளியிடுறவங்களுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டியதில்லை’ என்றார்.